தர்மபுரியில் புத்தக திருவிழாஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

தர்மபுரியில் புத்தக திருவிழாஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்
Published on

தர்மபுரியில் நடந்த 5-ம் ஆண்டு புத்தக திருவிழாவை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

புத்தக திருவிழா

தர்மபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தக பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில் 5-ம் ஆண்டு புத்தக திருவிழா தர்மபுரி வள்ளலார் திடலில் நேற்று தொடங்கியது. வருகிற 17-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் விழாவில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகளை கொண்ட லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இந்த விழாவில் நாள்தோறும் காலை முதல் இரவு வரை புத்தக கடைகள் திறந்திருக்கும்.

இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். தகடூர் புத்தக பேரவை செயலாளர் டாக்டர் செந்தில் வரவேற்று பேசினார். டாக்டர் செந்தில்குமார் எம்.பி., வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, பி.பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புத்தக திருவிழாவை தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டார். பின்னர் அவர் புத்தக திருவிழாவுக்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினார்.

குற்றங்கள் குறையும்

விழாவில் அமைச்சர் பேசுகையில், இதுபோன்ற புத்தக திருவிழாக்களை மாணவ, மாணவிகள், பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். புத்தகங்கள் படித்தால் குற்றங்கள் குறையும் என்று பேசினார். இதையடுத்து மாவட்ட அளவிலான கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், புத்தகத் திருவிழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார்.

இதில் முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன், கூடுதல் கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, உதவி கலெக்டர் கீதா ராணி, கல்லூரி கல்வி இணை இயக்குனர் ராமலட்சுமி, முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன், மாவட்ட நூலக அலுவலர் மாதேஸ்வரி, கைம்பெண் வாரிய உறுப்பினர் ரேணுகாதேவி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தங்கமணி, தமிழறிஞர் தகடூர் வனப்பிரியன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் தகடூர் புத்தக பேரவை தலைவர் சிசுபாலன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com