ஒரு பவுன் நகைக்காக பீரோவுக்குள் அடைத்து சிறுவன் கொடூர கொலை - பெண் வெறிச்செயல்

ஒரு பவுன் நகைக்காக சிறுவனின் வாயை துணியால் கட்டி பீரோவுக்குள் அடைத்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு பவுன் நகைக்காக பீரோவுக்குள் அடைத்து சிறுவன் கொடூர கொலை - பெண் வெறிச்செயல்
Published on

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஜான் ரிச்சார்ட். இவர் வெளி நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தற்போது அவரது மனைவி சகாய சில்ஜா, மகன் ஜோகன் ரிஷி மற்றும் மகளுடன் கடியப்பட்டணம் பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சிறுவன் ஜோகன் ரிஷி நேற்று மதியம் வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். உடனடியாக அக்கம் பக்கத்தில் தேடியும் சிறுவன் கிடைக்காத நிலையில் சகாய சில்ஜா மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சிறுவன் மாயமான நேரம் கழுத்து மற்றும் கையில் தங்க நகைகள் அணிந்திருந்ததால் நகைக்காக கடத்தியிருக்கலாம் என சந்தேகமடைந்த போலீசார் பக்கத்து வீட்டை சேர்ந்த பாத்திமா என்ற பெண் மீது சந்தேகமடைந்து அவரை விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

இதற்கிடையில் சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் பாத்திமா வீட்டை அடித்து நொறுக்கி சூரையாடிய போது பீரோ உடைந்தது. அதில் அந்த சிறுவன் வாய்கள் துணியால் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டார்.

இதைக்கண்ட அவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்த நிலையில், பாத்திமாவின் வீட்டை பொதுமக்கள் அடித்து நொறுக்கியதோடு அவரை உடனடியாக கைது செய்ய கோரி ஊரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு பவுன் நகைக்காக சிறுவனின் வாயை துணியால் கட்டி பீரோவுக்குள் அடைத்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com