

விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் தளவானூர் கிராமம் மற்றும் கடலூர் மாவட்டம் என திரிமங்கலம் கிராமங்களுக்கு இடையே ஓடும் தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.25 கோடியே 35 லட்சத்தில் புதிதாக தடுப்பணை கட்டப்பட்டு, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பயன்பாட்டுக்கு வந்தது.
இதன் மூலம் இரு மாவட்டங்களை சேர்ந்த நீண்ட கால கனவு நிறைவேறியதை அடுத்து, அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். நடப்பு ஆண்டில் பெய்த மழையால் அணைக்கட்டும் நிரம்பி வழிந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால், இவர்களது மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை.
நேற்று முன்தினம், திடீரென தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டது. அதாவது, தண்ணீர் திறப்பதற்கு கடலூர் மாவட்டத்தையொட்டி அமைந்துள்ள மதகு பகுதியின் அடிப்பகுதியில் மண் உள்வாங்கி, அதன் வழியாக தண்ணீர் அனைத்தும் ஆற்றில் வெளியேறியது. தேக்கி வைத்திருந்த தண்ணீர் அனைத்தும் ஆற்றில் வீணாக பாய்ந்தோடியது விவசாயிகளை கவலையடைய செய்தது.
இந்த நிலையில், நேற்று தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. விவசாயிகளுடன் சேர்ந்து அந்த பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது தரமற்ற தடுப்பணை கட்டியதாக கூறி தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது, உடைப்பு உடனடியாக சரிசெய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையேற்று அவர்கள் போராட்டத்தை விலக்கி கொள்வதாக அறிவித்தனர். சுமார் 4 மணி நேரம் நடந்த இவர்களது போராட்டத்தால் அந்த பகுதியில்பரபரப்பு நிலவியது.
போராட்டம் முடிவில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், அணைக்கட்டு உடைப்பு என்பது அ.தி.மு.க. அரசின் ஊழலுக்கு ஒரு எடுத்துகாட்டாகும். இந்த அணையை தரமற்ற முறையில் கட்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த துறைக்கு அமைச்சராக உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று கூறினார்.
இதற்கிடையே தடுப்பணையை பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைக்கும் பணி நடந்தது. இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணையில் தரை பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை செய்ய ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. தடுப்பணை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள 7 கோடி ரூபாய் நிதி மதிப்பீடு செய்து அரசுக்கு அனுப்பி உள்ளோம். எனவே விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும்.
அ.தி.மு.க.வினர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுபவர்கள் ஆதாரத்துடன் நிரூபிக்க தயாரா?. கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டை நிரூபியுங்கள், சந்திக்க தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.