பட்ஜெட் எதிரொலி: தங்கம் விலை பவுனுக்கு ரூ.616 அதிரடி உயர்வு

மத்திய பட்ஜெட் எதிரொலியால் தங்கம் விலை பவுனுக்கு ரூ.616 அதிரடியாக உயர்ந்து, வரலாறு காணாத உச்சத்தை நேற்று நெருங்கியது.
பட்ஜெட் எதிரொலி: தங்கம் விலை பவுனுக்கு ரூ.616 அதிரடி உயர்வு
Published on

சென்னை,

தங்கம் விலை தினமும் ஒரு விலை என்ற அடிப்படையில், ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதிலும் கடந்த மாதத்தில் பெரும்பாலும் உயர்வை நோக்கியே தங்கம் விலை பயணித்தது. இதனால் கடந்த மாதத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.41 ஆயிரம், ரூ.42 ஆயிரம், ரூ.43 ஆயிரம் என்ற நிலையை கடந்து இருந்தது.

இந்த நிலையில் தங்கத்தின் இறக்குமதி வரியில் மாற்றம் இருக்கலாம் என கருதியதால், தங்கத்தை பலரும் இருப்பு வைக்கத் தொடங்கினார்கள். இதனால் கடந்த மாதம் 29, 30-ந்தேதிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அதன் விலை சற்று குறைந்து இருந்தது.

நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தங்கத்தின் மீதான இறக்குமதி வரியில் மாற்றம் எதுவும் நிகழவில்லை. இதன் தாக்கம் உடனடியாக தங்கம் விலை எதிரொலித்ததை பார்க்க முடிந்தது.

பவுனுக்கு ரூ.616 உயர்வு

காலையில் கிராமுக்கு ரூ.22-ம், பவுனுக்கு ரூ.176-ம் உயர்ந்த நிலையில், மாலையில் மீண்டும் உயர்ந்து இருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 338-க்கும், ஒரு பவுன் ரூ.42 ஆயிரத்து 704-க்கும் விற்பனை ஆன தங்கம் விலை, நேற்று மாலை கிராமுக்கு ரூ.77-ம், பவுனுக்கு ரூ.616-ம் அதிரடியாக உயர்ந்தது.

இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 415-க்கும், ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதற்கு முன்பு கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 416-க்கும், ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்து 328-க்கும் தங்கம் விற்பனை ஆனதுதான் வரலாறு காணாத புதிய உச்சமாக பார்க்கப்பட்டது.

அந்தவகையில் நேற்றைய தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை நெருங்கி இருக்கிறது. இன்றோ (வியாழக்கிழமை), நாளையோ (வெள்ளிக்கிழமை) விலை அதிகரிக்கும்பட்சத்தில், தங்கம் வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்யும்.

காரணம் என்ன?

தங்கம் விலை உயர்வு குறித்து மெட்ராஸ் வைரம், தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானியிடம் கேட்டபோது, 'மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியில் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் பார்வை சென்றதன் விளைவால், தங்கம் விலை உயர்ந்திருக்கிறது. இனி வரக்கூடிய நாட்களிலும் விலையில் அதிரடி மாற்றம் இருக்கும்' என்றார்.

தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் கிராமுக்கு 30 காசும், கிலோவுக்கு ரூ.300-ம் அதிகரித்து, ஒரு கிராம் 74 ரூபாய் 80 காசுக்கும், ஒரு கிலோ ரூ.74 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com