மேல்மலையனூர்அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழாலட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Published on

மேல்மலையனூர், 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு மாசிப்பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனை தொடர்ந்து 2-ம் நாள் திருவிழாவான மயானக்கொள்ளை நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

உற்சவ அம்மனுக்கு ஆக்ரோஷமான அங்காள பரமேஸ்வரி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தார். காலை 9.30 மணிக்கு அங்கிருந்த உற்சவ அம்மனை பம்பை மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக கொண்டு செல்லப்பட்டு சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, மயானம் நோக்கி புறப்பட்டார்.

பொருட்களை வாரி இறைத்த பூசாரிகள்

பின்னர் பூசாரிகள் பிரம்ம கபாலத்தை (கப்பறைமுகம்) எடுத்துக் கொண்டு ஆடியபடி மயானம் நோக்கி சென்றனர். அங்கு மயானக்காளி முன்பு பக்தர்கள் தங்களது வயல்களில் விளைந்த தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் சுண்டல், கொழுக்கட்டை போன்றவைகளை நேர்த்திக்கடனாக செலுத்தி இருந்தனர். உற்சவ அம்மனுக்கு தீபாராதனை காண்பித்ததும், பக்தர்கள் செலுத்தி இருந்த பொருட்களை பூசாரிகள் வாரி இறைத்தனர். இதை சாப்பிட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும், தீராத நோய் குணமாகும் என்பதும் ஐதீகம். எனவே அங்கு கூடியிருந்த பக்தர்கள் போட்டி போட்டு அந்த பொருட்களை பிடித்து சாப்பிட்டனர். இதுவே மயானக்கொள்ளை என்று அழைக்கப்படுகிறது.

தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை காண்பித்தவுடன் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, இரவு ஆண் பூத வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

பக்தர்கள் நேர்த்திக்கடன்

விழாவில் அம்மனை வேண்டி விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பல்வேறு வேடம் அணிந்து வந்தனர். மேலும் சிலர் கோழியை கடித்தும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். அதேபோன்று திருமணம் நடக்கக்கோரியும், ஏற்கனவே வேண்டுதலின்படி திருமணம் நடைபெற்றதற்காக அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையிலும் பெண்கள், கூரைப்புடவை அணிந்து வந்திருந்ததையும் பார்க்க முடிந்தது. அதேபோன்று குழந்தைகள் பலரும் அம்மன் வேடம் அணிந்து வந்திருந்தனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தீ மிதி திருவிழா

விழாவின் 3-ம் நாளான இன்று (திங்கட்கிழமை) காலையில் தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு பெண் பூதவாகனத்திலும் அம்மன் வீதி உலா நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை தங்க நிற பல்லக்கிலும், இரவு சிம்ம வாகனத்திலும் அம்மன் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நாளை மறுநாள் (புதன் கிழமை) தீ மிதி உற்சவமும், இரவில் அன்ன வாகனத்தில் சாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது. தொடர்ந்து 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணிக்கு தேரோட்டம் நடைபெற இருக்கிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com