

சென்னை,
இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி பத்மஜா சுந்துரு இது குறித்து கூறியதாவது:-
இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கிகள் இணைப்பால் நாடு முழுவதும் இரு தரப்பிலான வங்கி சேவைப் பணிகள் முழுமையான அளவில் வலுப்பெறும். 112 ஆண்டுகள் பழமையான இந்தியன் வங்கியும், 154 ஆண்டுகள் பழமையான அலகாபாத் வங்கியும் இணைவதன் மூலம் 266 ஆண்டுகள் அனுபவம் கொண்ட வங்கி சேவையை பெற முடியும்.
இரு வங்கிகளும், கோர் பேங்கிஸ் சிஸ்டம் அமைப்பை ஒரே மாதிரியான தொழில்நுட்பத்தில் பயன்படுத்துவதால், வங்கி கிளைகள் இணைப்பு நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்பட்டு இந்த பணிகளை மேற்கொண்ட முதல் வங்கி என்ற நிலையை அடைவோம். வங்கிகள் இணைப்பின் மூலம் இந்தியன் வங்கி 7-வது பெரிய பொதுத்துறை வங்கியாக உருவெடுக்கும். 6 ஆயிரத்து 100 கிளைகளுடன் 43 ஆயிரம் ஊழியர்களுடன் இணைப்பாக செயல்படுவதுடன், சர்வதேச தரத்தை எட்டுவோம்.
வங்கிகள் இணைப்புக்கு பிறகு வர்த்தக மேம்பாடு, லாபம் மட்டுமே முதன்மை நோக்கமாக இல்லாமல், ஊழியர்களின் நலன், அவர்களது மேம்பாடு போன்ற பணிகளிலும் கவனம் செலுத்துவோம்.
வங்கிகள் இணைப்பு காரணமாக வங்கி கிளைகள் மூடப்படுவதோ அல்லது பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படாது. இரு வங்கிகளை சேர்ந்த ஊழியர்களும் இணைந்து பணியாற்றி சக்தி வாய்ந்த மனித ஆற்றலை உறுதிப்படுத்துவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.