காவிரி பிரச்சினைக்காக தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரம்

காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இந்த விவகாரத்தில் அவகாசம் கேட்டதுடன், சில விளக்கங்களையும் சுப்ரீம் கோர்ட்டிடம் மத்திய அரசு கேட்டு இருக்கிறது.
காவிரி பிரச்சினைக்காக தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரம்
Published on

சென்னை,

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. ஆளும் அ.தி.மு.க. மட்டுமின்றி எதிர்க்கட்சிகளும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்து உள்ளன. தமிழகம் முழுவதும் ரெயில் மறியல், சாலை மறியல், மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசுக்கு எதிராக நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. விக்கிரமராஜா தலைமையிலான வணிகர் சங்கத்தினர் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று உண்ணா விரத போராட்டம் நடைபெற்றது. சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது.

இப்போராட்டத்துக்கு அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, வெங்கடேஷ்பாபு, ஆர்.எஸ். ராஜேஷ், சத்யா, விருகை ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை அ.தி. மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்து, தாங்களும் பங்கேற்றனர். கூட்டத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர் ஜவஹர் அலி உள்ளிட்டோர் பேசினர்.

காலை 8 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரத போராட்டம் மாலை 5.30 மணியளவில் நிறைவடைந்தது. மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பழச்சாறு கொடுத்து முடித்துவைத்தார்.

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், ஜெ.தீபாவின் கணவர் மாதவன் ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

தி.மு.க. உள்பட எதிர்க்கட்சிகள் சார்பில் நாளை (5-ந் தேதி) தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அக்கட்சியின் செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர். ஞாயிறு அன்று நடைபெற்ற போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கைது ஆனார். போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களுடன் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் பல்வேறு இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது.

சென்னையின் முக்கிய சாலையாகவும், போக்குவரத்து அதிகம் நிறைந்த பகுதியாகவும் இருந்து வரும் அண்ணா சாலையில் தேனாம்பேட்டை சிக்னல் அருகே ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க.செல்வம் தலைமையில் ஏராளமானோர் தி.மு.க. கொடியை கைகளில் ஏந்தியபடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அண்ணா சாலை மற்றும் அதை ஒட்டி உள்ள அனைத்து சாலைகளிலும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அழைத்து சென்ற பின்னரும், போக்குவரத்து நெரிசல் சீராக வெகு நேரம் ஆனது. இதன் காரணமாக அந்த பகுதிகளில் வாகனங்களில் வந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

சென்னை தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட 9 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ.க்கள் வாகை சந்திரசேகர், அரவிந்த் ரமேஷ் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

தியாகராயநகர் பஸ் நிலையம் அருகே ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையிலும், சைதாப்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளிலும் தி.மு.க. வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கே.கே.நகர் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் பொதுக் குழு உறுப்பினர் துரைராஜ் தலைமையில் மாநில வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம், பகுதி செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் அசோக் பில்லர் ஜவகர்லால் நேரு 200 அடி சாலையில் மறியல் போராட்டம் நடந்தது.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் கோஷமிட்டனர். 48 இடங்களில் நடந்த சாலை மறியலால் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

சென்னை கொருக்குப்பேட்டை, திருவொற்றியூர், பொன்னேரி ஆகிய இடங்களில் ரெயில்களை மறித்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். ரெயில் என்ஜின் மீது ஏறி நின்று கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

இதை அறிந்த போலீசார் விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர். ரெயில் மறியல் போராட்டம் காரணமாக அந்த வழியாக வந்த அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும், மின்சார ரெயில்களும் தாமதமாக சென்றன. இதன் காரணமாக அரசு அலுவலர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

சென்னையில் நடந்த மறியலில் 700 பெண்கள் உள்பட 6 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். அந்தந்த பகுதிகளியில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com