

ஓசூர்
தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடித்து வரும் காவிரி பிரச்சனை குறித்த முக்கிய வழக்கின் தீர்ப்பை இன்று டெல்லி சுப்ரீம் கோர்ட் வழங்கவுள்ளது. இந்த தீர்ப்பு இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இருப்பினும் இந்த தீர்ப்பு வெளிவந்தவுடன் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுவதால் இன்று காலை முதல் தமிழக பேருந்துகள் கர்நாடக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து பெங்களூர் செல்லும் பேருந்துகள் ஓசூர் வரை மட்டுமே செல்கின்றன. இதனால் ஓசூரில் இருந்து பொதுமக்கள் கர்நாடக மாநில பேருந்துகளிலும், தனியார் பேருந்துகளிலும் சென்று வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது
சென்னை, வேலூர், திருவண்ணாமலை, நாகர்கோவில், திருநெல்வேலி ,
செங்கோட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, விழுப்புரம், மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பெங்களூரூ சென்ற பஸ்கள் அனைத்தும் ஓசூரில் நிறுத்தப்பட்டன.
இதே போல சேலம், ஓசூரில் இருந்து மைசூருக்கும் பஸ்கள் இயக்கப்படவில்லை. நேற்று இரவு பெங்களூருவில் இருந்து ஓசூருக்கு கர்நாடக மாநில அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று காலை முதல் அந்த பஸ்களும் நிறுத்தப்பட்டன.
பெங்களூருவில் இருந்து புறப்பட்டு வரும் கர்நாடக மாநில பஸ்கள் அந்த மாநில எல்லையான அத்திப்பள்ளி வரையே இயக்கப்படுகிறது. அந்த பஸ்களில் இருந்து இறங்கும் பயணிகள் நடந்து தமிழக எல்லைக்குள் வருகின்றனர். அங்கிருந்து ஆட்டோ, கார், மற்றும் டவுன் பஸ்கள் மூலம் ஓசூருக்கு வருகின்றனர்.
இதேபோல ஓசூர்-பெங்களூரு இடையே தமிழக அரசு பஸ்கள் மட்டும் அல்ல, தனியார் பஸ்களும் ஓடவில்லை. தமிழக - கர்நாடக எல்லைகளில் இரு மாநில போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் ஓடும் தமிழக அரசு லாரி மற்றும் சரக்கு வாகனங்கள் ஆங்காங்கே பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல தமிழகத்தில் இருந்து சென்ற ஆம்னி பஸ்களும் போலீஸ் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.