

சென்னை,
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கும் என்றும் அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், வருகிற நவம்பர் 3ந்தேதி வரை (நாளை) மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.
இந்த நிலையில், தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதன்படி, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இன்றும், நாளையும் கனமழை பெய்ய கூடும். டெல்டா மாவட்டங்கள் உள்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தீபாவளியன்று செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் மையம் தெரிவித்து உள்ளது.