சென்னை புத்தக கண்காட்சி; ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

சென்னை புத்தக கண்காட்சியை, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
சென்னை புத்தக கண்காட்சி; ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்
Published on

சென்னை புத்தக கண்காட்சி

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் 44-வது புத்தக கண்காட்சி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இதில் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்துவிளக்கேற்றியும், ரிப்பன் வெட்டியும் கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதில் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் உள்பட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், செயலாளர் எஸ்.முருகன், பொருளாளர் எ.கோமதிநாயகம் உள்பட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

புத்தக கண்காட்சி அடுத்த மாதம் (மார்ச்) 9-ந்தேதியுடன் முடிவடைகிறது. ஒவ்வொரு நாளும் கண்காட்சி காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 8 மணியுடன் நிறைவு பெறுகிறது. கண்காட்சிக்கு அனுமதி கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. கண்காட்சியில் சுமார் 700 அரங்குகளுடன் 500 பதிப்பாளர்களின் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளிலான புத்தகங்கள் இடம்பெற்று உள்ளன.

கொரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில் புத்தக கண்காட்சி நடத்தப்படுவதால், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. அதிலும் குறிப்பாக அரங்குகளுக்கு செல்லும் பாதைகள் ஒருவருக்கொருவர் உரசாமல் செல்வதற்கு ஏதுவாக விசாலமான பாதைகளாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. 5 நுழைவுவாயில்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டும், தெர்மல் ஸ்கேனர் கருவி கொண்டு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

கண்காட்சியில் வழக்கமாக வழங்கப்படும் 10 சதவீதம் தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர சில பதிப்பாளர்கள் 20 முதல் 30 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்குகிறார்கள். கொரோனா சூழலிலும் இந்த ஆண்டு வாசகர்கள் அதிகளவில் பார்வையிட வருவார்கள் என்றும், கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் ரூ.20 கோடி அளவில் புத்தகங்கள் விற்பனை ஆகும் என்றும் பபாசி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி அரங்கு எண் 242, 24310

சென்னை நந்தனத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தக கண்காட்சியில் 242, 243 எண் கொண்ட ஸ்டால்களில் தினத்தந்தி அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது. இதில் வெ.இறையன்பு எழுதிய செய்தி தரும் சேதி, செ.சைலேந்திரபாபு எழுதிய இளமையில் வெல், ஏவி.எம்.சரவணன் எழுதிய நானும் சினிமாவும், நெல்லை கவிநேசன் எழுதிய சிகரம் தொடும் சிந்தனைகள் உள்பட ஏராளமான புத்தகங்கள் 10 சதவீத தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. இதுதவிர வரலாற்று சுவடுகள் புத்தகங்கள் 4 பாகங்களும் சேர்ந்து ரூ.1,000-க்கு சிறப்பு தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. தினத்தந்தி அரங்கில் வாசகர்கள் ஆர்வத்துடன் பல்வேறு புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com