கரூர் அரசு மருத்துவமனைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை

உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கரூரில் நேற்று நடைபெற்ற விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த சம்பவம் குறித்து அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ.வை தொடர்பு கொண்டு மருத்துவமனைக்கு செல்லுமாறு உத்தரவிட்டார். பின்னர் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரையும் அங்கு செல்லுங்கள் என்றார்.
தொடர்ந்து உளவுத்துறை ஐ.ஜி.டேவிட்சன் தேவாசிர்வாதத்தை தொடர்பு கொண்டு சம்பவ நிலவரங்களை கேட்டறிந்து, அவரையும் உடனே கரூர் செல்லுமாறு உத்தரவிட்டார். கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேலுவை தொடர்பு கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீட்புப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் பணிகளை முன்னின்று கவனிக்க வேண்டும் என்றும், அனைவருக்கும் தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
அதேபோல திண்டுக்கல், திருச்சி, நாமக்கல் ஆகிய 3 மாவட்ட கலெக்டர்களையும் தொடர்பு கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைவரும் உடனடியாக கரூருக்கு செல்ல வேண்டும் என்றும், அங்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவே தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். திருச்சியில் இருந்து அவர் சாலை மார்க்கமாக காரில் இன்று அதிகாலை சுமார் 3.25 மணியளவில் கரூர் அரசு மருத்துவமனைக்கு வந்தார்.
மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து முதல்-அமைச்சர் கேட்டறிந்தார். அவருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, அன்பில் மகேஸ், சிவசங்கர், எ.வ.வேலு உள்ளிட்டோர் உள்ளனர்.
தொடர்ந்து கரூர் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். நிலைமையை கேட்டறிந்து பல்வேறு ஆலோசனைகளை முதல்-அமைச்சர் வழங்குகிறார்.






