பெரம்பலூர் அருகே கார் விபத்தில் பலியான குழந்தையின் தந்தை மூளைச்சாவு; இதயம் தானம் செய்யப்பட்டது

பெரம்பலூர் அருகே கார் விபத்தில் பலியான குழந்தையின் தந்தை மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது இதயம் தானம் செய்யப்பட்டது.
பெரம்பலூர் அருகே கார் விபத்தில் பலியான குழந்தையின் தந்தை மூளைச்சாவு; இதயம் தானம் செய்யப்பட்டது
Published on

கார் விபத்து

சென்னை புழல் காவாங்கரை பகுதியை சோந்தவர் கணேசன் (வயது 32). இவருடைய மனைவி பத்மா (32). இந்தநிலையில் கணேசன் குடும்பத்தினரும், பத்மாவின் தங்கையான சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த மஞ்சு (28) குடும்பத்தினரும் மதுரை அருகே திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு காரில் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு கடந்த 10-ந்தேதி மதியம் மீண்டும் சென்னைக்கு திரும்பினர்.

காரை கணேசன் ஓட்டினார். மாலை 4.30 மணியளவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலுத்தூர் தாலுகா, திருவளக்குறிச்சி பிரிவு சாலை அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது கணேசனின் கட்டுப்பாட்டை இழந்த கார் நிலை தடுமாறி சாலையின் மைய தடுப்பு சுவரில் மோதி எதிரே உள்ள சாலைக்கு சென்று விபத்துக்குள்ளானது.

குழந்தை பலி

இதில் கணேசன், அவரது மனைவி பத்மா, அவர்களுடைய குழந்தைகள் தஷ்வந்த் (4), தக்ஷித் (3 மாதம்) மற்றும் மஞ்சு, மஞ்சுவின் கணவர் ஷாம் சுந்தா (30), அவர்களுடைய குழந்தைகளான சிவானி (5), சக்தி (2) ஆகிய 8 பேரும் படுகாயம் அடைந்தனர். இதனை கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கணேசனின் 3 மாத குழந்தை தக்ஷித் பரிதாபமாக இறந்தான்.

இதயம் தானம்

இதில் மேல் சிகிச்சைக்காக கணேசன், பத்மா ஆகிய 2 பேர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் கணேசன் நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து டாக்டர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை செய்து கணேசனின் இதயத்தை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு பொருத்த முடிவெடுத்தனர். அதன்படி நேற்று கணேசனுக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது இதயம் திருச்சியில் இருந்து விமானம் மூலம் மதியம் 2.45 மணியளவில் இண்டிகோ விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு கணேசனின் இதயம் பொருத்தப்பட்டது.

குழந்தையின் உடல் பெரம்பலூரில் அடக்கம்

குழந்தை தக்ஷித்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனை பிரேத கூடத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தக்ஷித்தின் தாய் சிகிச்சையில் இருந்து வந்ததால், அவனது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் இருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் குழந்தையின் தாய் வழி தாத்தா பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவர் பேரனின் உடலை பெரம்பலூரில் அடக்கம் செய்ய முடிவு செய்தார். இதையடுத்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் பெரம்பலூர் கிளையின் கவுரவ செயலாளர் ஜெயராமன் தலைமையில், உதிரம் நண்பர்கள் குழுவினர் தங்களது சொந்த செலவில் பெரம்பலூரில் நல்லடக்கம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com