மத்திய அரசு சட்டத்தை ஆதரிப்பதாக தவறான தகவல் பரப்புகிறார்கள் சினிமா இயக்குனர் தங்கர்பச்சான் போலீசில் புகார்

சினிமா இயக்குனர் தங்கர்பச்சான் தன்னை பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.
மத்திய அரசு சட்டத்தை ஆதரிப்பதாக தவறான தகவல் பரப்புகிறார்கள் சினிமா இயக்குனர் தங்கர்பச்சான் போலீசில் புகார்
Published on

சென்னை,

பள்ளிக்கூடம், சொல்ல மறந்த கதை உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களை இயக்கியவர் தங்கர்பச்சான். நடிக்கவும் செய்துள்ளார். அவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். அங்கு உளவுப்பிரிவு துணை கமிஷனர் விமலாவை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பரபரப்பு பேட்டியில் கூறியதாவது:-

நான் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையிலும், தமிழ் இலக்கிய துறையிலும் ஈடுபட்டு வருகிறேன். எனது மனதுக்கு சரி என்று பட்டதை நான் தைரியமாக பேசி வருகிறேன்.

மத்திய அரசு திரைப்பட ஒளிப்பதிவு சட்டத்தை திருத்தி புதிய மசோதா ஒன்றை கொண்டுவர உள்ளது. அந்த சட்டத்தை எதிர்ப்பதாக இந்தியாவிலேயே முதன் முதலாக கருத்து சொன்னவன் நான். இந்திய பட உலகம் மட்டும் அல்லாது, மக்களும் அதை எதிர்க்கிறார்கள்.

கழுத்தை நெரிக்கும் சட்டம்

மத்திய அரசு கொண்டுவரவுள்ள அந்த சட்டம் மக்கள் நலனுக்கு எதிரானது. சினிமாவின் கழுத்தை நெரிக்கும் சட்டம். மக்களுக்குள்ள ஒரே பொழுதுபோக்கு சாதனம் திரைப்படம்.

மத்திய அரசின் புதிய சட்டம் மக்களை சிந்திக்க விடாமல் மயக்கத்தில் வைக்க உதவும். புதிய சட்டத்தின்படி ஒரு திரைப்படத்தை மத்திய அரசு நினைத்தால் தடை செய்யலாம். ஏற்கனவே மாநில அரசின் பல உரிமைகளை பறித்து வரும் மத்திய அரசு மக்களின் ஒரே பொழுதுபோக்கு சாதனமான சினிமாவையும் புதிய சட்ட திருத்தம் மூலம் முடக்கப்பார்க்கிறது.

தவறான தகவல்

இதுதான் என்னுடைய நிலைப்பாடு. தொலைக்காட்சி பேட்டி ஒன்றிலும் நான் அழுத்தம், திருத்தமாக மத்திய அரசின் புதிய சட்டதிருத்த வரைவை எதிர்ப்பதாக கூறி உள்ளேன். ஆனால் சில சமூக விரோதிகள் நான் மத்திய அரசின் சட்டத்தை ஆதரிப்பதாக தொலைக்காட்சி பேட்டியில் கூறியதாக தவறான தகவலை சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள்.

கடந்த மூன்று ஆண்டுகளாக நான் சொல்லாத கருத்தை சொன்னதாக தவறான, அவதூறான தகவலை எனது நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

எனவேதான் நான் துணை கமிஷனரை சந்தித்து மனு கொடுத்துள்ளேன். நான் சொல்லாத கருத்தை சமூக வலைத்தளங்களில் இருந்து முடக்க வேண் டும். அதோடு அந்த கருத்தை பரப்பியவர்கள் யார் என்றும் கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுத்து, உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று மனுவில் கூறி உள்ளேன்.

அடையாறு சைபர் கிரைம் பிரிவுக்கு உடனடி நடவடிக்கைக்காக எனது புகார் மனுவை துணை கமிஷனர் அனுப்பி உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com