அரசு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி மையம்

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி மையம் தொடங்கப்படும் என்று அமைச்சர் அர.சக்கரபாணி பேசினார்.
அரசு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி மையம்
Published on

கல்லூரி கனவு நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்-2 படித்த மாணவ-மாணவிகளின் உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில், பள்ளி கல்வித்துறை சார்பில் 'கல்லூரி கனவு' எனும் நிகழ்ச்சி திண்டுக்கல் ஜி.டி.என். கலைக்கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டி கையேட்டை வெளியிட்டு, மாணவர்களுக்கு வழங்கினார். முன்னதாக அவர் பேசியதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் புதிதாக 6 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் ஏழை-எளிய மாணவர்கள் உயர்கல்விக்காக இனிமேல் வெளி மாவட்டத்துக்கு செல்லாமல், இங்கேயே படிக்கலாம். மேலும் அடுத்த ஆண்டு நத்தத்தில் புதிதாக அரசு கல்லூரி தொடங்கப்படும்.

பயிற்சி மையம்

மேலும் டி.என்.பி.எஸ்.சி. போட்டி தேர்வு, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் நவீன பயிற்சி மையம் தொடங்கப்படும். சென்னையில் இருக்கும் பயிற்சி அகாடமியை போன்று சிறந்த பேராசிரியர்கள், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். தேர்வுகளில் வென்றவர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படும்.

பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ரோபோ முறை பயிற்சி அளிக்கப்படும். மேலும் ஒவ்வொரு துறையிலும் சிறந்த சாதனையாளர்களை கொண்டு கோடைகாலத்தில் பயிற்சி அளிக்கப்படும். இதுதவிர உடற்பயிற்சி, மனநலம், ஆரோக்கிய உணவுகள், நாகரிகம் தொடர்பாக ஆலோசனை வழங்கப்படும். மேலும் தமிழர் பண்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

வேலைவாய்ப்பு

தொழில் துறையில் 14-வது இடத்தில் இருந்த தமிழகம், முதல்-அமைச்சரின் நடவடிக்கையால் 3-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 90 லட்சம் பேர் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர். இவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க, தமிழகத்தில் தெடங்கப்படும் வெளிநாட்டு நிறுவனங்களில் முன்னுரிமை அளிக்கப்படும். வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோருக்கு உதவும் வகையில் விருப்பத்தின் பேரில் வெளிநாட்டு மொழி பயிற்சி அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், வேலுச்சாமி எம்.பி., காந்திராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மேயர் இளமதி, ஜி.டி.என் கல்லூரி தாளாளர் கே.ரெத்தினம், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கதிரேசன், மாவட்ட கல்வி அலுவலர்கள் திருநாவுக்கரசு, கீதா மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com