காட்பாடி ரெயில்வே மேம்பால பணி தொடக்கம்; மாற்றுப் பாதையில் இயக்கப்பட்ட வாகனங்கள்

காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் பழுதுபார்க்கும் பணிகள் தொடங்கப்பட்டதை அடுத்து மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன.
காட்பாடி ரெயில்வே மேம்பால பணி தொடக்கம்; மாற்றுப் பாதையில் இயக்கப்பட்ட வாகனங்கள்
Published on

வேலூர்:

மங்களூரு - விழுப்புரம் சாலையில் காட்பாடி ரெயில்வே மேம்பாலம் அமைந்து உள்ளது. இந்த மேம்பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இது தமிழகத்தையும் ஆந்திராவையும் இணைக்கும் மேம்பாலம் ஆகும். இந்த மேம்பாலம் வழியாகத்தான் சித்தூர், திருப்பதிக்கு பஸ்கள், லாரிகள் இயக்கப்பட்டு வந்தன.

தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர மற்றும் லாரிகள், பஸ்கள் சென்று வந்ததால் மேம்பாலம் வலுவிழந்தது. மேலும் பாலத்தில் ஆங்காங்கே விரிசல்கள் காணப்பட்டன.

இதன் காரணமாக ரெயில்வே மேம்பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி மேம்பாலம் பழுது பார்க்கும் பணி இன்று தொடங்கப்பட்டது. இதனால் மேம்பாலத்தில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு தடுப்புகள் வைத்து மூடப்பட்டது. இதனால் மேம்பாலம் வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன.

இந்த மாற்று பாதையில் சாலைகள் சரியாக இல்லை, குண்டும் குழியுமாக உள்ளது, மின்விளக்கு வசதி இல்லை என அதனை பார்வையிட அ.தி.மு.க மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு தெரிவித்தார்.

மேலும் இந்த மாற்றுப் பாதையில் டாஸ்மாக் கடை இருப்பதால் குடிமகன் அட்டகாசம் அதிகமாக இருக்கும். எனவே டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இந்த மாற்றுப் பாதையைஆய்வு செய்து சீரமைக்க வேண்டும். அப்போதுதான் பயணிகள் பாதுகாப்புடன் பயணிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com