வணிக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.134 குறைப்பு

வணிக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.134 குறைந்து ரூ.2,373-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு வியாபாரிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
வணிக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.134 குறைப்பு
Published on

சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்தும், டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலைகளை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையையும், கியாஸ் சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை என்ற அளவில் மாற்றியமைக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில் ரூ.965-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் கடந்த மாதம் (மே) 7-ந்தேதி ரூ.50 விலை உயர்த்தப்பட்டு ரூ.1,015-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது தொடர்ந்து, கடந்த மாதம் 19-ந்தேதி மீண்டும் வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.3.50 உயர்த்தப்பட்டதால் தற்போது ரூ,1,018.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ரூ.134 விலை குறைப்பு

அதேபோல் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை கடந்த மாதம் ரூ.8 உயர்ந்து ரூ.2,507-க்கு விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் நடப்பு மாதத்திற்கான (ஜூன்) கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவித்து உள்ளது. அதில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் ரூ.1,018.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதாவது கடந்த மாத விலையிலேயே நீடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் விலையில் ரூ.134 குறைக்கப்பட்டு ரூ.2 ஆயிரத்து 373 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

வியாபாரிகள் வரவேற்பு

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்ததற்கு வியாபாரிகள் வரவேற்பு தொவித்து உள்ளனர். அதேபோல் வீட்டு உபயோக சிலிண்டர் விலையை உயர்த்தாமல் கடந்த மாத விலையை தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே, இந்த மாதம் சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருப்பது இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com