ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணை 15 நாட்களுக்கு ஒத்திவைப்பு

ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் பணிகள் 15 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #Jayalalithaa | #InquiryCommission #sasikala
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணை 15 நாட்களுக்கு ஒத்திவைப்பு
Published on

சென்னை

மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த நீதி விசாரணை ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.

சென்னை எழிலகத்தில் உள்ள விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அரசு டாக்டர்கள் மற்றும் அவரின் உதவியாளர்கள், உறவினர் என பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும் விளக்கம் அளித்துள்ளது. 75 நாட்கள் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன? என்பது பற்றிய மருத்துவ சிகிச்சை விவரங்கள் 2 சூட்கேசில் கொண்டு வந்து சமர்பித்தனர்.

மேலும் ஜெயலலிதா உயிரோடு இருந்த போது தலைமை செயலாளராக இருந்த ராம்மோகன்ராவ் மற்றும் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி பதில் அளித்தனர். மேலும் சசிகலாவுக்கு எதிராக சிலர் தகவல்களை கூறி உள்ளனர்.

இதை தொடர்ந்து சசிகலாவுக்கு எதிராக புகார் அளித்தவர்கள் விவரங்களை தர ஆணையத்தில் சசிகலா சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் நீதிபதி ஆறுமுகசாமி முன்பு ஆஜராகி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தவர்கள் அனைவரையும் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என கோரினார். இனி ஆஜராகி விளக்கமளிப்பவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்திக்கொள்ளலாம்' என்று கூறி கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

தற்போது புகார்தாரர்களிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை நடத்தவும் ஆறுமுகசாமி ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. சிவக்குமார், பூங்குன்றம், பாலாஜி ஆகிய 3 பேரின் விவரத்தை மட்டும் தர மறுக்கப்பட்டுள்ளது. 3 பேரின் தகவல்கள் முழுமையாக பெறப்படவில்லை என்று ஆணையம் விளக்கமளித்துள்ளது.

இந்நிலையில் அவர்களிடம் குறுக்கு விசாரணை செய்யவும் சசிகலா தரப்பில் கோரப்பட்டிருந்தது. இதைதொடர்ந்து அதற்கும் விசாரணை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

மேலும் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு 22 பேரின் வாக்குமூலங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சசிகலா தரப்பில் குறுக்கு விசாரணை 15 நாட்களுக்கு பிறகு வரும் பிப்ரவரி 12-ம் தேதி தனது விசாரணையைத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com