சேதம் அடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

மத்திய அரசிடம் இருந்து நிதி வரும் வரை காத்திருக்காமல், சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
சேதம் அடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
Published on

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகள் ஏமாற்றம்

வடகிழக்கு பருவமழையால் பயிர் சேதம் ஏற்பட்ட நிலையில், இதற்கென அமைக்கப்பட்ட குழு ஆய்ந்து அறிக்கை அளித்ததன் அடிப்படையில் முழுமையாக சேதமடைந்த இனங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்றும், நடப்பு சம்பா பருவத்தில் நடவு செய்து, நீரில் மூழ்கி சேதமடைந்த பகுதிகளை மறு சாகுபடி செய்திட ஏதுவாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.6,038 மதிப்பீட்டில் இடுபொருட்கள் வழங்கப்படும் என்றும் நவம்பர் மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்ததை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சித்தலைவராக இருந்தபோது ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற தற்போதைய முதல்-அமைச்சரின் வேண்டுகோள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தேன். ஆனால், அதற்கு இதுநாள் வரை எவ்வித பதிலும் தரப்படவில்லை.

தற்காலிக சீரமைப்பு பணி

இந்தநிலையில் பெருமழையால் ஏற்பட்ட சேதங்களில் தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக ரூ.6,230 கோடியே 45 லட்சத்தை விடுவிக்க உள்துறை அமைச்சகத்திற்கு அறிவுரை வழங்குமாறு பிரதமருக்கு முதல்-அமைச்சர் 29-12-2021 அன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

இது மட்டுமல்லாமல், மாநில பேரிடர் நிவாரண நிதியும் முழுமையாக பயன்படுத்தப்பட்டு உள்ளதாக அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். அப்படியென்றால், மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு மத்திய அரசின் பங்காக 2021-2022-ம் ஆண்டில் எவ்வளவு ஒதுக்கப்பட்டது என்ற விவரத்தையும், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதலாக ஏதாவது ஒதுக்கப்பட்டதா? என்ற விவரத்தையும், இதுவரை எத்தனை கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது என்ற விவரத்தையும் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கு உண்டு.

ரூ.30 ஆயிரம் இழப்பீடு

மத்திய அரசிடம் இருந்து நிதிவரும் வரை காத்திருக்காமல், சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com