காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் படுகொலை சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கு எடுத்துக்காட்டு - ராமதாஸ்

காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் படுகொலைக்கு காவல்துறையின் அலட்சியம் தான் காரணம் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயக்குமார் தனசிங், கடத்திச் சென்று அவருக்கு சொந்தமான தோட்டத்தில் எரித்து படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் படுகொலைக்கு காவல்துறையின் அலட்சியம் தான் காரணம் ஆகும். தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கடந்த ஏப்ரல் 30-ம் தேதியே நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் எழுத்து மூலம் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார். ஒரு கட்சியின் மாவட்ட தலைவராக இருப்பவர் புகார் அளிக்கும் போது அதனடிப்படையில் அடுத்த நிமிடமே காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய காவல்துறை தவறி விட்டது.

ஜெயக்குமார் விவகாரத்தில் மட்டுமின்றி, அனைத்து விவகாரங்களிலும் இதே அலட்சியத்துடன்தான் காவல்துறை செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டது என்பதற்கு நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கடத்தி படுகொலை செய்யப்பட்டதுதான் எடுத்துக்காட்டு ஆகும்.

ஜெயக்குமார் படுகொலையின் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள மக்களிடம் ஒருவித அச்சம் நிலவுகிறது. ஜெயக்குமார் படுகொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். அதன்மூலம் மக்கள் மத்தியில் இழந்த நம்பிக்கையை காவல்துறை மீட்டெடுக்க வேண்டும்; மக்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com