குலசேகரன்பட்டினத்தில் தொடரும் கடல் அரிப்பு: மக்கள் அச்சம்

திருச்செந்தூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடல் அரிப்பு ஏற்பட்டு, மராமத்து பணிகள் நடந்து வருகின்றன.
குலசேகரன்பட்டினத்தில் தொடரும் கடல் அரிப்பு: மக்கள் அச்சம்
Published on

தூத்துக்குடி,

பிரசித்திபெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நாளை தசரா திருவிழா தொடங்க உள்ளது. இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிசா சூரசம்காரம் கோவில் கடற்கரையோரம் நடைபெறும். அன்றைய தினம் கடற்கரை பகுதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்து விடியவிடிய திருவிழாவை கண்டுகளிப்பது வழக்கம். இத்தகையை முக்கியத்தும் வாய்ந்த குலசேகரன்பட்டினம் கோவில் கடற்கரையோரத்தில் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகிசாசூரசம்காரம் நடைபெறும் பகுதியில் ஏற்பட்ட கடல் அரிப்பால் சுமார் 100 மீ தொலைவில் இருந்த 100-க்கும் மேற்பட்ட பனைமரங்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. எனவே உடனடியாக கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், கடல் அரிப்பை தடுக்கவோ, பாதிக்கப்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகளோ மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் கோவில் கடற்கரையில் உள்ள பூங்காவின் சுற்றுச்சுவர் தொடர் கடல் அரிப்பால் கடலுக்குள் இடிந்து விழுந்தது. அதையொட்டி இருந்த 5 உயர்மின்கோபுர விளக்கு கம்பங்களும் கடலுக்குள் சரிந்து விழுந்து சேதமடைந்தன. இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே திருச்செந்தூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடல் அரிப்பு ஏற்பட்டு, மராமத்து பணிகள் நடந்து வருகின்றன. மேலும், அந்த பகுதியில் கடல் அரிப்பு நின்றுள்ளது. ஆனால் குலசேகரப்பட்டினத்தில் தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் கடற்கரை பகுதி களைஇழந்து காணப்படுகிறது. எனவே கடல் அரிப்பை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com