

இலவச வேட்டி, சேலை
தமிழக சட்டசபையில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பை அமைச்சர் காந்தி தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மாநிலத்தில் உள்ள 14 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் 54 ஆயிரம் விசைத்தறி தொழிலாளர்கள் ஆகியோர்களுக்கு தொடர் வேலை வாய்ப்பு அளிப்பது மற்றும் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு சேலைகள் மற்றும் வேட்டிகள் வழங்குவது ஆகிய நோக்கங்களுடன் இலவச வேட்டி, சேலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான இந்தத் திட்டத்தை செயல்படுத்த திருத்த வரைவு செலவு திட்ட மதிப்பீட்டில் ரூ.490.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், முதல் தவணைத் தொகை ரூ.157.38 கோடி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
புவிசார் குறியீடு
1999-ம் ஆண்டு புவிசார் குறியீடு சட்டத்தின் கீழ் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உற்பத்தி செய்யப்படும் தனித்தன்மை வாய்ந்த பொருட்களை பதிவு செய்து புவிசார் குறியீடு பெறுவதாகும். இதன் மூலம் தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பை வழங்குவதோடு, புவிசார் குறியீடு பெறாத இனங்களை புவிசார் குறியீடு பெற்ற இனங்களாக எண்ணி தவறுதலாக நுகர்வோர்கள் வாங்குவதிலிருந்து பாதுகாக்க முடியும். புவிசார் குறியீடு சட்டத்தின் கீழ் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், காஞ்சீபுரம் பட்டு சேலைகள், பவானி ஜமக்காளம், மதுரை சுங்குடி சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டி, ஆரணி பட்டு சேலைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், திருபுவனம் பட்டு சேலைகள் மற்றும் கண்டாங்கி சேலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நெகமம் சேலைகள், வீரவநல்லூர் செடிபுட்டா சேலைகள் மற்றும் உறையூர் பருத்தி சேலைகள் ஆகியவற்றை இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்ய துறையால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோ-ஆப்டெக்ஸ்
புதிய வடிவமைப்புகளை உருவாக்குதல், புதிய ரகங்களை அறிமுகம் செய்தல், விற்பனை நிலையங்களை நவீனப்படுத்துதல், அரசுத்துறை நிறுவனங்களில் துணி தேவைகளை வழங்குதல், பரவலான விளம்பரங்கள் ஆகிய நடவடிக்கைகள் மூலம் 2021-22-ம் ஆண்டிற்கு ரூ.250 கோடி விற்பனை இலக்கை அடைய கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.