கொரோனா பீதி புனித பயணத்திற்கு சவுதி அரேபியா தடை சென்னை பயணிகள் தடுத்து நிறுத்தம்

கொரோனா பீதியால் மெக்கா மற்றும் மதீனாவுக்கு புனித பயணம் செல்ல சவுதி அரேபியா தடை விதித்து உள்ளது இதனால் சென்னையில் இருந்து செல்ல இருந்த பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சென்னை

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்காக, மெக்கா மற்றும் மதீனாவுக்கு புனித பயணம் செல்ல சவுதி அரேபியா தடை விதித்துள்ளது.

சவுதி வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சிறிது காலமாகவே கொரோனா வைரஸ் குறித்த விஷயங்களை கவனித்து வருவதாகவும், கொரோனாவின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் பிற நாடுகளுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில், ஏற்றுக்கொள்ளத்தக்க சர்வதேச நடவடிக்கைகளை தாங்களும் அமுல்படுத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதை, புனித பயணம் செல்லும் பயணிகளுக்கு தற்காலிக தடை விதிப்பதன் மூலம் செயல்படுத்த இருப்பதாக சவுதி தெரிவித்துள்ளது. ஆகவே, மெக்கா மதீனாவுக்கு புனித பயணம் செய்வதற்காக சவுதி அரேபியாவிற்குள் நுழைவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வைரஸ் பரவிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டிலிருந்து யாராவது வரும் பட்சத்தில், சுற்றுலா விசாவுடன் வருபவர்களுக்கும் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் தற்காலிக நடவடிக்கைகள் தான் என்று சவுதி அரசு தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் பரவிக்கொண்டிருக்கும் நாடுகளுக்கு போக வேண்டாம் என்றும் தன் குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ள வெளியுறவு அமைச்சகம், மனித சமுதாயம் முழுவதையும் இறைவன் காப்பாற்றவேண்டும் என வேண்டிக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சவுதி அரேபிய அரசின் உத்தரவால் சென்னையில் இருந்து மதினாவுக்கு புனித பயணம் உம்ரா மேற்கொள்ளும் பயணிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து எமிரேட் விமானத்தில் பயணம் செய்ய இருந்த 250 பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com