சேலம் மாவட்டத்தில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் கொரோனா நோயாளிகள்!

சப்பாத்தி, தோசை, இட்லி வேண்டும் என்று சேலத்தில் ஆன்லைனில் கொரோனா நோயாளிகள் உணவு ஆர்டர் செய்து வருகிறார்கள்.
சேலம் மாவட்டத்தில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் கொரோனா நோயாளிகள்!
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 10-க்கும் மேற்பட்ட சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அங்கு கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் வரை சிறப்பு மையங்களில் அவர்களுக்கு அரசு உணவு வழங்குகிறது. ஆனால் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தரமான உணவுகள் வழங்கப்படுவது இல்லை என்று பரவலாக புகார் எழுந்து வருகிறது. ஆனால் வேறு வழியின்றி அங்கு கிடைக்கும் உணவுகளையே கொரோனா நோயாளிகள் சாப்பிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சேலத்தில் கொரோனா சிறப்பு மையத்தில் தங்கியுள்ள நோயாளிகள் சிலர் ஆன்லைன் மூலம் தங்களுக்கு தேவையான உணவுகளை ஆர்டர் செய்து அதை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட தொங்கும் பூங்காவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 227 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது அந்த படுக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டன.

அங்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் மாநகராட்சி சார்பில் நோயாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த சிகிச்சை மையத்தில் தங்கியுள்ள கொரோனா நோயாளிகளில் சிலர் கடந்த சில நாட்களாக ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்து அதை வாங்கி சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இரவு 7.30 மணி அளவில் தனியார் உணவு வினியோக நிறுவன ஊழியர்கள், மோட்டார் சைக்கிளில் சிகிச்சை மையத்திற்கு முன்பு வெளியே நின்று கொண்டு, உணவு ஆர்டர் செய்த நோயாளிகளை அவர்களது செல்போனுக்கு தொடர்பு கொண்டு வரவழைக்கிறார்கள். பின்னர் சிகிச்சை மையத்திற்கு வெளியே வந்து, பார்சல் உணவுகளை நோயாளிகள் வாங்கிக்கொண்டு செல்கிறார்கள்.

இதே போல் தினமும் நோயாளிகள் தங்கள் பிடித்தமான உணவு வகைகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டு வருவதாக தனியார் உணவு வினியோக நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர். அதாவது இரவு நேரங்களில் சப்பாத்தி, தோசை, இட்லி போன்ற உணவு வகைகளை அதிக அளவில் ஆர்டர் செய்து வாங்குவதாகவும் தனியார் நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர். அதேசமயம் இங்கு தங்கியுள்ள நோயாளிகளின் உறவினர்கள் சிலரும் இரவு வேளையில் டிபன், உணவு தயாரித்து வந்து கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com