புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் கொரோனா நிவாரண நிதியாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.4,000 வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதன் முதல் தவணையாக தற்போது ரூ.2,000 ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த நிவாரணம் சென்று சேரும் வகையில் தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-

கொரோனா நோய் தொற்றின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையிலும், பெருந்தொற்று நேரத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், ரூ.4153.39 கோடி செலவில், மே 2021 மாதத்தில் 2,07,66,950 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2000/- நிவாரணத் தொகையினை முதல் தவணையாக வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தற்போது நடைமுறைக்கு வந்துள்ள 2,14,950 புதிய அரிசி குடும்ப அட்டைகளை பெற்றுள்ள குடும்ப அட்டைதாரர்களின் வாழ்வாதாரத்திற்கும் மேற்கூறிய உதவியை வழங்கிடும் வகையில், ரூ.42.99 கோடி செலவில் மே 2021 மாதத்தில் ரூ.2,000/- நிவாரணத் தொகையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com