

சென்னை,
சீனாவின் உகான் நகரில் தோன்றி உலகம் முழுவதும் 155 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 107 ஆக அதிகரித்து இருந்தது. 2 பேர் பலியாகி உள்ளனர். 13 பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர். இன்று வரை 114 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் ஒருவருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.
கொரோனா வைரஸ் எதிரொலியாக, எல்.கே.ஜி. முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கல்வி நிறுவனங்களை மூட முன்பே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் வரும் 31ந்தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, தமிழகத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்படும். பல்கலைக்கழகங்களும் செயல்படாது. அதேவேளையில், 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரசு தேர்வுகள் மற்றும் நுழைவு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் தொடர்ந்து இயங்கும்.
அங்கன்வாடி மையங்கள் மூடப்பட வேண்டும். இந்த குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கு தேவையான உணவு பொருட்களை அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். அங்கன்வாடி மைய குழந்தைகளின் உணவை, வீட்டிற்கு சென்று ஊழியர்கள் வழங்க வேண்டும்.
பொதுமக்கள் திருமணங்கள், இதர சமூக விழாக்கள் மற்றும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு செல்லாமல் அவற்றை தவிர்க்க வேண்டும். திருமண மண்டபங்களில் திட்டமிட்ட நிகழ்வுகளை தவிர புதிய நிகழ்வுகளை நடத்த வேண்டாம்.
திரையரங்குகள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் பார்கள், கேளிக்கை பூங்காக்கள் மற்றும் அனைத்து விளையாட்டு அரங்குகளையும் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. மாநாடு, ஊர்வலம், கருத்தரங்கு நடத்த தடை விதிக்கப்படுகிறது.
விடுமுறையையொட்டி சுற்றுலா செல்ல மக்கள் திட்டமிட வேண்டாம். தலைமை செயலகத்திற்கு வருவதனையும் தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் கூடுவதை, அடுத்த 14 நாட்களுக்கு பொது மக்கள் தவிர்க்க வேண்டும்.
கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். கொரோனா பற்றி வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பிற மாநிலங்களில் இருந்து பேருந்தில் வருபவர்களும் இனி சோதனை செய்யப்படுவார்கள். அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கும். அனைத்து உத்தரவுகளும் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.