ரூ.320 கோடி செலவில் கட்டப்பட்ட பாலத்தில் விரிசல்: ஊழல் குறித்து விசாரணை தேவை - அன்புமணி ராமதாஸ்

ரூ.320 கோடியில் கட்டப்பட்ட பாலம் திறக்கப்படுவதற்கு முன்பே சேதமடைவது இயல்பானது அல்ல என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
ரூ.320 கோடி செலவில் கட்டப்பட்ட பாலத்தில் விரிசல்: ஊழல் குறித்து விசாரணை தேவை - அன்புமணி ராமதாஸ்
Published on

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;

"நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் நகரில் நெரிசலை குறைத்திடும் வகையில் 3.40 கி.மீ தொலைவுக்கு கட்டப்பட்டுள்ள பாலத்தின் பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பதும், சுற்றுச்சுவரின் கற்கள் பெயர்ந்து விழுவதும் அங்குள்ள மக்களிடம் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. ரூ.320 கோடியில் கட்டப்பட்டுள்ள அந்த மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தான் திறந்து வைத்த நிலையில், அதற்கு முன்பாகவே பாலம் சேதமடைந்திருப்பது கட்டுமானப் பணிகளின் தரமற்றத் தன்மையைத் தான் காட்டுகின்றன.

பள்ளிப்பாளையம் பாலம் சென்னை - கன்னியாகுமரி தொழில்தடத் திட்டத்தின் கீழ், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ளது. பன்னாட்டு வங்கிகளின் நிதியுதவியுடன் பாலம் கட்டப்படும் போது கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து தரத்தை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை ஆகும். அவ்வாறு ஆய்வுகள் செய்யப்பட்டிருந்தால் பாலம் சேதமடைந்திருக்க வாய்ப்பில்லை. இந்த கோணத்தில் பார்க்கும் போது பாலத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது முதலே அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்கக் கூடும் என்று பள்ளிப்பாளையம் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அவற்றை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கட்டப்பட்ட பாலங்கள், சாலைகள் ஆகியவற்றின் தரம் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.15.90 கோடியில் கட்டப்பட்ட பாலம் அடுத்த 3 மாதங்களில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அணையிலிருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டது தான் இதற்குக் காரணம் என்று கூறி அரசு தப்பிவிட்டது.

ரூ.320 கோடியில் கட்டப்பட்ட பாலம் திறக்கப்படுவதற்கு முன்பே சேதமடைவது இயல்பானது அல்ல. பாலத்தைக் கட்டுவதில் நடந்த ஊழலும், அதன் காரணமாக நடந்த தரமற்ற கட்டுமானப் பணிகளும் இதற்குக் காரணமாக இருக்க முடியும். எனவே, பள்ளிப்பாளையம் பாலத்தைக் கட்டுவதில் நடந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும். பள்ளிப்பாளையம் மேம்பாலம் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டுள்ள நிலையில், அது போக்குவரத்திற்கு உகந்தது தானா? என்பது குறித்த பாதுகாப்பு தர ஆய்வுகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com