ரெயில் தண்டவாளத்தில் விரிசல்

கடலூரில் ரெயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. கேட் கீப்பர் பார்த்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததால் பயணிகள் ரெயில் தப்பியது.
ரெயில் தண்டவாளத்தில் விரிசல்
Published on

கடலூர் முதுநகர், 

திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 7 மணிக்கு கடலூர் செல்லாங்குப்பம் ரெயில்வே கேட்டை கடந்து சென்றது. இந்த ரெயிலுக்காக மூடப்பட்ட கடலூர் செல்லாங்குப்பம் ரெயில்வே கேட்டை, கேட் கீப்பர் அழகர் செல்வம் என்பவர் திறந்தார். அப்போது அங்கு ரெயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவர், கடலூர் முதுநகர் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அந்த நேரத்தில் விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி பயணிகள் ரெயில் வந்து கொண்டிருந்தது.

போலீசார் விசாரணை

ரெயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக அந்த பயணிகள் ரெயில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து கடலூர் முதுநகர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையில் போலீஸ்காரர் சதீஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை பார்வையிட்டு அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதனிடையே ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்டவாள விரிசலை தற்காலிகமாக சீரமைத்தனர். அதனை தொடர்ந்து விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் இருந்து 45 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.

ஆய்வுக்கு அனுப்பி வைப்பு

அதன்பின்னர் விரிசல் ஏற்பட்ட இடத்தில் மட்டும் தண்டவாளத்தை அகற்றிவிட்டு, புதிய தண்டவாளம் அமைக்கப்பட்டது. மேலும் விரிசல் ஏற்பட்ட தண்டவாள இரும்பு பகுதியை மட்டும் ஆய்வு செய்வதற்காக சென்னை ஆய்வகத்துக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதன் முடிவு வந்தபிறகுதான் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தால் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதா?, அல்லது வேறு யாரேனும் நாசவேலையில் ஈடுபட்டனரா? என்ற விவரம் தெரியவரும் என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை கேட் கீப்பர் அழகர் செல்வம் பார்த்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com