தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டி
Published on

பஸ் வசதி வேண்டும்

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டிய அடுத்த வரதேகவுண்டன்தொட்டி, திம்மேனட்டி மலை கிராமங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கரக்கல்லில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர். அந்த பகுதி மாணவர்கள் பல ஆண்டுகளாக தினமும் 6 கிலோ மீட்டர் நடந்து சென்று படித்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் கடும் சிரமப்பட்டு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதால் சில மாணவர்கள் சோர்வடைந்து பள்ளிக்கு செல்ல தயங்குகின்றனர். எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி பஸ் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அஞ்செட்டி, கிருஷ்ணகிரி.

தரைமட்ட தடுப்புச்சுவரால் ஆபத்து 

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அணையில் இருந்து பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு வர திருமல்வாடி வழியாக தரை மட்டத்தில் இருந்து 20 அடி ஆழம் கொண்ட கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. திருமல்வாடியில் இந்த கால்வாயின் மேல் தார் சாலை செல்கிறது. சாலையின் பக்கவாட்டு பகுதியில் அமைந்துள்ள தடுப்புகள் போதிய உயரம் இல்லாமல் காணப்படுகின்றன. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் தடுமாறினாலும் கால்வாயில் விழும் அபாயம் உள்ளது. தினமும் மாணவ- மாணவிகள் அந்த சாலையை கடந்து சென்று வருகிறார்கள். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தார் சாலையின் பக்கவாட்டு பகுதிகளில் தடுப்பு சுவர்களின் உயரத்தை அதிகரிக்க வேண்டும்.

-முனிராஜ், பாப்பாரப்பட்டி, தர்மபுரி.

குளம்போல் தேங்கும் கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த மொளசி கிராமத்தில் உள்ள தேவம்பாளையம் தெருவில் சாக்கடை கால்வாய் இல்லை. இதனால் தெருவில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்களும் அதிகரித்துவிட்டன. நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் நலன் கருதி சாக்கடை கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

-கண்ணன், திருச்செங்கோடு, நாமக்கல்.

சேதமடைந்த விளையாட்டு உபகரணங்கள் 

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அங்குள்ள ரோஸ்கார்டன் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது. இதனால் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடனே திரும்பி செல்கின்றனர். இதுபற்றி புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க வேண்டும்.

-கஜா, ஏற்காடு.

சாலை வசதி தேவை

சேலம் சூரமங்கலம் அருகே போடிநாயக்கன்பட்டி ரெயில்வே பாலம் அமைக்கப்பட்டது. இந்த வழியாக தினமும் காட்டூர், போடிநாயக்கன்பட்டி அண்ணாநகர், ஆண்டிப்பட்டி ஆகிய ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர், ரெயில்வே பாலத்தில் இருந்து சூரமங்கலம் செல்வதற்கு சரியான பாதை வசதி இல்லை. இந்த ரெயில்வே தரைப்பாலம் அமைக்கப்பட்ட போது சாலை வசதி செய்து கொடுப்பதாக கூறியிருந்தனர். ஆனால் இதுவரையிலும் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை வசதி ஏற்படுத்தி தர அந்தபகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ராஜா, ஆண்டிப்பட்டி, சேலம்.

சாக்கடை கால்வாய் சீரமைக்கப்படுமா?

சேலம் செவ்வாய்பேட்டை 28-வது வார்டு பால் மார்க்கெட் அருகே உள்ள மாரி தெருவில் மழைக்காலங்களில் கழிவுநீர் வீட்டுக்குள் புகுந்து விடுகிறது. இந்த பிரச்சினை பல வருடங்களாக உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தால் ஒருமுறை மட்டும் வந்து சுத்தம் செய்துவிட்டு சென்று விடுகிறார்கள். பின்னர் மீண்டும் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு நிரந்தர தீர்வுகான நடவடிக்கை எடுப்பார்களா?

-ராஜேஷ்,மாரி தெரு குடிமக்கள், சேலம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com