தடுப்புச்சுவர் இல்லாத வாய்க்கால் பாலத்தில் அபாய பயணம்

தடுப்புச்சுவர் இல்லாத வாய்க்கால் பாலத்தில் அபாய பயணத்தை பொதுமக்கள் மேற்கொள்கின்றனர்.
தடுப்புச்சுவர் இல்லாத வாய்க்கால் பாலத்தில் அபாய பயணம்
Published on

வாய்க்காலில் விழும் அபாயம்

சமயபுரம் அருகே ச.கண்ணனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நரசிங்கமங்கலத்தில் பெருவளை வாய்க்கால் உள்ளது. இப்பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். நரசிங்கமங்கலத்தையும், கல்லுக்குடியையும் இணைக்கும் வகையில் பெருவளை வாய்க்காலின் குறுக்கே ஒரு பாலம் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அந்த பாலத்தின் கைப்பிடி சுவர் பல மாதங்களுக்கு முன்பே இடிந்து விழுந்து விட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாலத்தை கடந்து செல்லும்போது நிலைதடுமாறி வாய்க்காலில் விழும் அபாய நிலை உள்ளது.

மேலும் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் பாலத்தின் வழியே நடந்து செல்லும்போது மிகுந்த அச்சத்துடன் செல்கின்றனர். நரசிங்கமங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் நோயாளிகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் இந்த வழியாக செல்லும்போது சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

சுகாதார சீர்கேடு

மேலும், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அருகில் உள்ள இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள இந்த பெருவளை வாய்க்காலில் குளித்துவிட்டு செல்வார்கள். இதற்கிடையே அப்பகுதியில் இருந்தும், வாய்க்காலை ஒட்டியுள்ள பொது கழிப்பிடத்தில் இருந்தும் பெருவளை வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

அசம்பாவிதம் ஏற்படும்

இது குறித்து நரசிங்கமங்கலத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் கூறியதாவது:- நரசிங்கமங்கலத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகிறோம். இங்குள்ள மக்கள் மாரியம்மன் கோவிலுக்கும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க சமயபுரம் கடை வீதிக்கும் இந்த பாலம் வழியாக சென்று வருகின்றனர். மேலும் திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகள் உள்ளிட்டோரும் இந்த பாலத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும். தற்போது தண்ணீர் அதிகமாக சென்று கொண்டிருக்கிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாலத்தை கடக்கும்போது, நிலை தடுமாறி வாய்க்கால் நீரில் விழுந்தால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com