

சென்னை
அத்திவரதர் வைபவம் நாளையுடன் நிறைவடையும் நிலையில் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனத்துக்காக காத்திருக்கின்றனர்.
46-வது நாளான இன்று அத்திவரதருக்கு பச்சை மற்றும் வெள்ளை நிற பட்டாலும், மலர்களால் ஆன ஆடையாலும் ராஜ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதிகாலை முதல் காலை 11 மணி வரை 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் மேலும் லட்சக் கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இன்று பிற்பகல் 12 மணிக்கு நடை அடைக்கப்பட்டு கோவில் வளாகத்துக்குள் உள்ளவர்கள் மாலை 5 மணி வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 மணிக்குப் பிறகு ஆடி கருட சேவை நிகழ்ச்சி நடைபெறும் நிலையில் அது நிறைவடைந்த பின் மாலை 7 மணிக்குப் பிறகு மீண்டும் தரிசனம் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எவ்வளவு பக்தர்கள் இருந்தாலும் அனைவரும் நள்ளிரவு வரையோ, அதிகாலை வரையோ தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வி.ஐ.பி. தரிசனவரிசையில் பிற்பகல் 2 மணியுடன் அனுமதி நிறுத்தபட்டு அதன் பிறகு வரிசையில் நிற்பவர்கள் மாலை 5 மணி வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் 5 மணிக்குப் பிறகு வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனால் விஐபி-விவிஐபி பாஸ்களுடன் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.