தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி மரணம் அடைந்த விவகாரம்: கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு

கோவையில் பேரிடர் பயிற்சியின்போது உயிரிழந்த மாணவி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி மரணம் அடைந்த விவகாரம்: கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு
Published on

கோவை,

தேசிய பேரிடர் மேலாண்மை குழு சார்பில் கோவை அருகே தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று பேரிடர் காலங்களில் எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்பது குறித்து மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் முகாம் நடைபெற்றது. இதில் கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டாலோ அல்லது பூகம்பம் உள்ளிட்ட நிகழ்வுகளின்போதோ கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து தப்பிப்பது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

3 மாடிகளை கொண்ட இந்த கல்லூரியில் 2-வது மாடியில் இருந்து மாணவிகள் கீழே குதிக்கவும், அவர்களை வலை மூலம் பிடித்து காப்பாற்றுவது போலவும் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி பெறுவதற்காக மாணவிகள் 2-வது மாடியில் நின்றுகொண்டு இருந்தனர். கீழே மாணவிகளை காப்பாற்றுதவற்காக சிலர் வலையை பிடித்துக்கொண்டு நின்றிருந்தனர்.

இந்த கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்துவந்த லோகேஸ்வரி (வயது 19) என்பவரும் பயிற்சியில் கலந்துகொண்டார். இவர் 2-வது மாடியில் இருந்து கீழே குதிக்க தயக்கம் காட்டினார். அப்போது மேலே நின்றுகொண்டிருந்த பயிற்சியாளர் ஒருவர் தைரியமாக குதி என்று கூறி உற்சாகப்படுத்தினார். ஒருகட்டத்தில் மாணவியின் கையைப் பிடித்து கீழே குதிக்கவைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக லோகேஸ்வரியின் தலை முதல் மாடியில் இருந்த சிலாப்பில் இடித்தது. இதில் அவரது தலை மற்றும் கழுத்து பகுதியில் பலமாக அடிபட்டது. இதனை பார்த்துக்கொண்டு இருந்த மாணவிகள் பயத்தில் அலறினர்.

காயமடைந்த மாணவி லோகேஸ்வரி உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு முதலுதவி பெற்ற அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பயிற்சியாளர் ஆறுமுகம் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு

இந்த நிலையில், கோவையில் பேரிடர் பயிற்சியின்போது உயிரிழந்த மாணவி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதல் அமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டம், வெள்ளிமலைப்பட்டிணம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்த, ஆலாந்துறை கிராமத்தைச் சேர்ந்த நல்லாக்கவுண்டர் என்பவரின் மகள் செல்வி லோகேஸ்வரி என்பவர் 12.7.2018 அன்று கல்லூரியில், பயிற்சியின் போது, ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்து, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த யோகேஸ்வரியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உரிய அனுமதி பெறாமல், கல்லூரி மாணாக்கர்களுக்கு முறையற்ற பயிற்சி அளித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல் துறை மற்றும் கல்லூரிக் கல்வி துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

எனது உத்தரவின் பேரில், காவல் துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டதில், முறையற்ற பயிற்சி வழங்கிய திரு. ஆறுமுகம் என்பவர் நேற்றிரவே கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த செல்வி யோகேஸ்வரி குடும்பத்திற்கு ரூபாய் ஐந்து லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com