ஆர்.கே.பேட்டை அருகே போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

ஆர்.கே.பேட்டை அருகே போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தலித் மக்கள் முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்.கே.பேட்டை அருகே போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்
Published on

ஆர்.கே.பேட்டை அடுத்த ராஜநகரம் பகுதியில் 100 ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுமனை பட்டா அரசு சார்பில் வழங்கப்பட்டது. இதற்கு அதே கிராமத்தை சேர்ந்த மாற்றுசமூகத்தினர் பல ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த பிரச்சினையில் மனித உரிமை ஆணையம் தலையிட்டு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க ஆணையிட்டது. இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய் துறையினர் ஆதி திராவிடர் மக்களுக்கு நிள அளவீடு செய்து கல் நட்டனர். இதனை மாற்று சமூகத்தை சேர்ந்த நபர்கள் அளவீடு கல்லை பிடிங்கி எறிந்தனர். இது சம்மந்தமாக மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடந்த போரட்டத்தில் ஆர்.கே.பேட்டை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் மற்றும் போலீசார் தாக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து தலித் மக்கள் முன்னணி அமைப்பினர் திருத்தணியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சின்னப்பன் தலைமை வகித்தார், வக்கீல் காபிரியேல் வரவேற்புரையாற்றினார். தலித் மக்கள் முன்னணி அமைப்பின் மாநில தலைவர் திருநாவுக்கரசு கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் தமிழரசன் கலந்துக்கொண்டு பேசுகையில், ராஜநகரம் கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் பல ஆண்டுகளாக நிலத்திற்காக அகிம்சை வழியில் போராடி வருகின்றனர். ஆதிதிராவிடர் மக்கள் மற்றும் வருவாய் துறை, போலீஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

இந்த ஆர்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com