

திருவண்ணாமலை நகராட்சியில் வரிசெலுத்தாதவர்களின் விவரங்கள் வெளியிடப்படும் என்று ஆணையாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரூ.46 கோடி வரிபாக்கி
திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய பகுதியாக திருவண்ணாமலை நகராட்சி உள்ளது. இங்குள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்வதற்காக உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் திருவண்ணாமலைக்கு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகத்தின் கடமையாகும்.
இவ்வாறு ஆன்மிக பக்தர்கள் மற்றும் அனைத்து வகை பொதுமக்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நிதி ஆதாரம் என்பது மிக முக்கியமாக ஒன்றாகும். அந்த வகையில் நகராட்சியின் வருவாய் வரவினங்களான சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணங்கள் மற்றும் கடை வாடகை, குத்தகை தொகைகள் நீண்ட காலமாக முழுமையாக வசூலாகாமல் ரூ.46 கோடியே 59 லட்சம் வரி பாக்கி நிலுவையில் உள்ளது.
கடந்த 10-ந்தேதி நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் ஒவ்வொரு நகராட்சிகள் தனது வருவாய் இனங்களை 100 சதவீதம் வசூல் செய்யப்பட வேண்டும். அவ்வாறு வசூல் செய்யப்படாத நகராட்சிகளுக்கு அரசின் எந்த திட்டமும் அனுமதிக்க முடியாது.
விவரங்கள் வெளியிடப்படும்
மேலும் 100 சதவீதம் வசூல் செய்யாத வருவாய் பிரிவு பணியாளர்கள் மட்டுமல்ல ஆணையாளர்கள், மண்டல இயக்குனர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்.
எனவே நகர வளர்ச்சி மற்றும் திருவண்ணாமலை நகருக்கு வருகை தரும் ஆன்மிக பக்தர்களுக்கு போதிய அளவில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நிதி ஆதாரம் அவசியம் என்பதால் பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் தாங்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை நிலுவையோடு நகராட்சி கருவூலத்தில் செலுத்தி நகர வளர்ச்சியில் தங்களது பங்களிப்பை உறுதி செய்திட வேண்டும்.
வரி செலுத்தாத வரிவிதிப்புதாரர்கள், வியாபாரிகள், கடை உரிமையாளர்கள், குத்தகை தாரர்கள் விவரங்கள் பொது வெளியில் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.