திருவள்ளூர் மாவட்டத்திற்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் - கலெக்டர் வெளியிட்டார்

திருவள்ளூர் மாவட்டத்திற்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார்.
திருவள்ளூர் மாவட்டத்திற்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் - கலெக்டர் வெளியிட்டார்
Published on

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

அப்போது கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சென்னை தலைமை தேர்தல் அதிகாரி, அரசு முதன்மை செயலாளர் ஆகியோர் அறிவுரையின்படியும், நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் 1,500 அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு செய்து வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 3,657 முதன்மை வாக்குச்சாவடிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுரையின்படி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் தணிக்கை செய்து தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு முன்மொழிவுகள் அனுப்பி வைத்ததன் பேரில், வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்படுகிறது.

இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல் சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்களின் அலுவலகங்களான வருவாய் கோட்ட அலுவலகம், மண்டல அலுவலகம் மற்றும் உதவி வாக்குப்பதிவு அலுவலகங்களான தாசில்தார், நகராட்சி ஆணையர் அலுவலகங்களில் விளம்பர பலகைகளில் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே அரசியல் கட்சிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், குடியிருப்போர் நல சங்க உறுப்பினர்கள் எவருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தங்களது எழுத்துப்பூர்வமான கடிதங்களை வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலருக்கு இந்த வாக்குச்சாவடி பட்டியல் வெளியிட்ட 7 நாட்களுக்குள் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி, தேர்தல் தனி தாசில்தார் செல்வம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com