முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குமரிக்கு இன்று வருகை; அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்

குமரிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) வருகிறார். அவர் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குமரிக்கு இன்று வருகை; அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்
Published on

நாகர்கோவில்,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) குமரி மாவட்டம் வருகிறார். இதற்காக அவர் இன்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வருகிறார். அங்கிருந்து பிற்பகல் 3 மணி அளவில் கார் மூலம் புறப்பட்டு குமரிக்கு வரும் அவருக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமையில் அ.தி.மு.க. சார்பில் 6 இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. முதலில் ஆரல்வாய்மொழி, தோவாளை, நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சந்திப்பு ஆகிய பகுதிகளில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அதை தொடர்ந்து அவர் நாகர்கோவில் ராமவர்மபுரம் அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் தங்கி ஓய்வெடுக்கிறார். பின்னர் அவர் அருமனை கிறிஸ்தவ இயக்கத்தின் சார்பில் அருமனையில் நடைபெறும் 23-வது கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்க இரவு 7 மணிக்கு நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டுச் செல்கிறார். அப்போது தக்கலை மற்றும் மார்த்தாண்டத்தில் அ.தி.மு.க.வினர் வரவேற்பு அளிக்கிறார்கள்.

இரவு 8 மணிக்கு அருமனை புண்ணியம் சந்திப்பை சென்றடையும் அவருக்கு அருமனை கிறிஸ்தவ இயக்கம் சார்பில் அதன் செயலாளர் ஸ்டீபன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதை ஏற்றுக்கொண்டு, புண்ணியம் சந்திப்பில் இருந்து கிறிஸ்துமஸ் விழா நடைபெறும் மேடை வரையில் நடைபெறும் 42 வகையான கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டவாறு 9 மணிக்கு விழா மேடையை முதல்-அமைச்சர் சென்றடைகிறார்.

அதன் பிறகு கிறிஸ்துமஸ் விழா மத நல்லிணக்க மாநாடு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமையில் தொடங்குகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேக்' வெட்டி கிறிஸ்துமஸ் விழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். கோட்டார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ், குழித்துறை மறை மாவட்ட குருகுல முதல்வர் ரசல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் முன்னிலை வகித்து பேசுகிறார். விழா முடிந்ததும் அன்று இரவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெல்லை மாவட்டம் புறப்பட்டு செல்கிறார்.

முன்னதாக 7.5 சதவீத மருத்துவ இடஒதுக்கீட்டில் பயன்பெற்ற குமரியை சேர்ந்த 10 மாணவர்களை விருந்தினர் மாளிகையில் சந்தித்து அவர் பேசுகிறார்.

முதல்-அமைச்சரின் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. அவர் வந்து செல்லும் இடங்களில் எல்லாம் அ.தி.மு.க.வினர் கொடி, தோரணங்கள் அமைத்துள்ளனர். ஆங்காங்கே சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன. அவர் வந்து செல்லும் இடங்கள், அவருக்கு வரவேற்பு அளிக்கும் பகுதிகள், விழா நடைபெறும் அருமனை பகுதி மற்றும் மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாகர்கோவில் ராமவர்மபுரம் அரசு விருந்தினர் மாளிகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தங்கி ஓய்வெடுக்க இருப்பதால் நேற்று முன்தினத்தில் இருந்தே துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீஸ் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் மூலமும் நேற்று அரசு விருந்தினர் மாளிகையின் அனைத்து பகுதிகளிலும் சோதனை செய்யப்பட்டது. இதேபோல் அருமனை விழா மேடை அமைந்துள்ள பகுதி போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. விழாமேடையைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் முதல்-அமைச்சரின் வருகை பாதுகாப்பு பணிக்காக நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் இந்த பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com