காவிரி பிரச்சனையில் விவசாயிகளுக்கு திமுக அநீதி இழைத்து உள்ளது -முதல் அமைச்சர் பழனிசாமி

காவிரி பிரச்சனையில் விவசாயிகளுக்கு திமுக அநீதி இழைத்து உள்ளது என முதல்-அமைச்சர் பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார். #CauveryManagementBoard #EedappadiPalanisamy
காவிரி பிரச்சனையில் விவசாயிகளுக்கு திமுக அநீதி இழைத்து உள்ளது -முதல் அமைச்சர் பழனிசாமி
Published on

சென்னை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும், அதை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம்தாழ்த்தி வருகிறது. எனவே, மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அதிமுகவினர் தரப்பில் போராட்டம் நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று நடைபெற்ற போராட்டத்தில் முதல்-அமைச்சர் பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். மாலை உண்ணாவிரதம் முடிந்ததும் முதல்-அமைச்சர் பழனிசாமி உரையாற்றினார்.

முதல்-அமைச்சர் பழனிசாமி பேசுகையில் காவிரி பிரச்சனை விவகாரத்தில் திமுகவை கடுமையாக சாடினார்.

திமுக காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்க தவறி விவசாயிகளுக்கு துரோகம் செய்தது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அமல்படுத்தவும் திமுக நடவடிக்கை எடுக்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியம், நீர் முறைப்படுத்தும் குழுவை அமைக்க வேண்டும் என்பதே அரசின் கோரிக்கையாகும். காவிரி பிரச்னையில் அதிமுக அரசு எந்தளவுக்கு அழுத்தம் தந்தது என்பது மக்களுக்கு தெரியும். காவிரி பிரச்னையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பிலும் அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து வருகிறோம்.

காவிரி பிரச்னையில் விவசாயிகளுக்கு திமுக அநீதி இழைத்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்தபோதே திமுக அழுத்தம் கொடுத்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திருக்கலாம். மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என அப்போது திமுக கூறியிருந்தால், காவிரி பிரச்னை தீர்ந்திருக்கும். சந்தர்ப்பம் கிடைத்த போது எல்லாம் தவறவிட்டு திமுக கபடநாடகம் ஆடியது என்றார் முதல்-அமைச்சர் பழனிசாமி. டெல்டா பாசன விவசாயிகளுக்கு நீர் கிடைக்க ஜெயலலிதா வழியில் இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் குறிப்பிட்டார். காவிரி உரிமைக்காக போராடி வெற்றி பெறுவோம் எனவும் தெரிவித்தார் முதல்-அமைச்சர் பழனிசாமி.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com