

போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர், மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள "மின்னகம் - மின்நுகர்வோர் சேவை மையம்" மற்றும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்தில் மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணனுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டு, வடகிழக்கு பருவமழை மற்றும் எதிர்வரும் கோடைகாலத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (19.10.2025) தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் "மின்னகம் - மின்நுகர்வோர் சேவை மையம்" மற்றும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்தில் மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணனுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டு, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்நிலை மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
முதலாவதாக, சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள மைலாப்பூர் பண்டகசாலையில் தளவாட பொருட்களின் கையிருப்பு நிலை குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, வடகிழக்கு பருவமழையின்போது பொதுமக்கள் மின் தடங்கல் மற்றும் மின்சார பாதுகாப்பு சம்பந்தமான புகார்களை எவ்விதத் தொய்வுமின்றி தெரிவித்திட வழிவகை செய்யும் விதமாக, மின்னகத்தில் கூடுதலாக 10 நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனால், பொதுமக்கள் மின்சாரம் குறித்து புகார் அளிக்கும் போது, அழைப்புகளுக்காக நீண்ட நேரம் காத்திருப்பது தவிர்க்கப்படும்.
அமைச்சர் மின்னகத்தில் பெறப்படும் அழைப்புகளுக்கான காத்திருப்பு நேரத்தை தற்போதுள்ள 20 நொடிகளில் இருந்து 10 நொடிகளாகக் குறைத்து, எவ்வித அழைப்பும் விடுபடாமல், உடனடியாக இணைப்பு பெற நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். மேலும், மின் தடை குறித்த ஒவ்வொரு புகாரும் உடனடியாக சரி செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட மின் பகிர்மான வட்டங்களில் இயங்கி வரும் மின்னகம் மூலமாகவும், புகார்தாரரிடம் அலைபேசி மூலமாகவும் புகார் சரி செய்யப்பட்டதை உறுதி செய்த பின்னரே புகார்கள் முடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தின் போது முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைந்த சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 01.04.2025 முதல் 18.10.2025 வரை மொத்தமாக 11,87,000 சிறப்பு பராமரிப்பு பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் மாநிலம் முழுவதும் பழுதடைந்த மின் கம்பங்கள் 34,401 எண்ணிக்கை மாற்றப்பட்டுள்ளன. தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் 58,264 இடங்களில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. பழைய மின் பாதை கம்பிகள் 1,243 கி. மீ அளவிற்கு புதிதாக மாற்றப்பட்டுள்ளது. துணை மின் நிலையத்தில் 2,464 முறை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இதுவரை 2,303 பில்லர் பாக்ஸ்கள் தரைமட்டத்திலிருந்து ஒரு மீட்டர் உயரத்திற்கு உயர்த்தப்பட்டிருக்கின்றன. கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை 9,544 பில்லர் பெட்டிகள் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், மழைக்காலத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ஆபத்தான நிலையில் பூமிக்கு வெளியில் புதைவட கம்பி இணைப்புகள் சுமார் 3,418 எண்ணிக்கை சரி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்வதற்காக 11,435 மின்மாற்றிகள், 3,30,636 மின் கம்பங்கள் மற்றும் 8,515 கி.மீ. மின் கம்பிகள், 1,471 கி. மீ. அளவில் புதைவட கம்பிகள், மற்றும் 3,41,015 மின் அளவிகள் உட்பட அனைத்து தளவாட பொருட்களும் கையிருப்பில் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கான பொதுவான பாதுகாப்பு அறிவுரைகள்:
முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ், மாநிலம் முழுவதும் மின்சார வாரியம் விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மின் சேவை தடைகள் ஏற்படாதவாறு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அனைத்து பணியாளர்களும் பாதுகாப்புடன் விழிப்புடன் செயல்பட வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார். மின் சேவைகள் மற்றும் மின் தடை குறித்த புகார்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் மின்னகத்தை 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.