கோ பேக் மோடி என்று சொன்னாலும் தமிழகத்திற்கு முதலீடுகளை தந்தவர் மோடி- வானதி ஸ்ரீனிவாசன்

மத்திய அரசு நிதி கொடுத்தால் கூட அதனை சரிவர பயன்படுத்த முடியாத அரசாக தமிழக அரசு இருப்பது வேதனை அளிக்கிறது என பாஜக மாநில மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கூறினார்.
கோ பேக் மோடி என்று சொன்னாலும் தமிழகத்திற்கு முதலீடுகளை தந்தவர் மோடி- வானதி ஸ்ரீனிவாசன்
Published on

மதுரை

வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிவகங்கைக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த பாஜக மாநில மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் . அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற ஜனவரி 12 ஆம் தேதி பாரதப் பிரதமர் தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகள் திறந்துவைக்க வருகிறார். அப்போது மதுரையில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.

கடந்த காலத்தில் தமிழகத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் மோடி ஜி வந்தபோது திமுகவினர் கோ பேக் மோடி என்று காட்டினர் இப்போது அப்படி காட்ட முடியாது தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்காக பிரதமர் வருகிறார்.

கடந்த முறை தமிழகத்தில் நடைபெற்ற ஆயுத தளவாட கண்காட்சியை திறந்து வைக்க வரும்போது கோ பேக் மோடி என்று தி.மு.க.வினர் சொன்னாலும்கூட அந்தத் திட்டத்தின் மூலம் 2000 கோடி முதலீடு நடந்திருப்பதாக சட்டமன்றத்தில் நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார்.

பிரதமரை நீங்கள் திரும்பி போ என்று கூறினாலும் கூட அந்தத் திட்டத்தில் 2000 கோடி ரூபாய் முதலீடு தமிழகத்திற்கு இன்று கிடைத்துள்ளது.

எனவே இவையெல்லாம் தி.மு.க.வினர் இன்று சரியாக புரிந்து கொண்டிருப்பார்கள் எனவே கோ பேக் மோடி இன்று இப்போது சொல்ல மாட்டார்கள்.

தமிழகத்தை மத்திய அரசு மாற்றாந்தாய் பிள்ளையாக பார்க்கவில்லை. தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக மத்திய அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய் அறிவித்திருக்கிறது. மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் தமிழகத்தில் 2, 3, திட்டங்கள் அமுல்படுத்த முடியாத நிலையே உள்ளது.

மத்திய அரசு நிதி கொடுத்தால் கூட அதனை சரிவர பயன்படுத்த முடியாத அரசாக தமிழக அரசு இருப்பது வேதனை அளிக்கிறது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மு க ஸ்டாலின்,உதயநிதி ஸ்டாலின் கையில் ஒற்றை செங்கலை வைத்துக்கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் நடைபெறவில்லை என்று கூறினார்கள். தங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனே அந்த திட்டம் நிறைவேற்றி விடுவோம் என்றெல்லாம் சொல்லி வந்த நிலையில் தற்போது நிலை என்ன கட்டிடங்கள் கட்டி விட்டார்களா? என்று கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com