

சென்னை,
தமிழ்நாட்டில் சத்துணவு திட்டம் என்ற மதிய உணவுத் திட்டம், காமராஜர் ஆட்சி காலத்தில் தொடங்கி இதுவரை கோடிக்கணக்கான பள்ளிக் குழந்தைகளின் நலனை பாதுகாத்து வரும் திட்டமாகும். தேசிய அளவில் மாதிரித் திட்டமாக அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் இதுவும் ஒன்று.
ஆனால், தமிழகத்தில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்பட பல ஊழல்வாதிகளை கோடீசுவரர்களாக்கிய திட்டங்களில் ஒன்றாகவும் இந்த திட்டம் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக வருமான வரித்துறை, சி.பி.ஐ. போலீசார் சிறப்பாக செயல்பட்டு, குட்கா, கருப்புப் பணம் போன்ற பல முறைகேடுகளை கண்டுபிடித்து வருகின்றனர். இதில் பல அரசியல்வாதிகள், அதிகாரிகள் சிக்கியுள்ளனர். போலீஸ் அதிகாரிகளும் சில முறைகேடுகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.
முட்டை கொள்முதலில் ஊழல் நடந்ததாக சமீபத்தில் பெரிய குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது மதிய உணவுத் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதை கண்டுபிடித்து, அதுதொடர்பான தகவலை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
திருச்செங்கோட்டில் கிறிஸ்டி பிரைட்கிராம் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மதிய உணவுத் திட்டம் உள்பட சமூகநலத் துறையின் மற்ற பல திட்டங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், பருப்பு வகைகள், பாமாயில் போன்றவற்றை இந்த நிறுவனம் வினியோகம் செய்து வருகிறது.
சில ரகசிய தகவல்கள் வந்ததைத் தொடர்ந்து கிறிஸ்டி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் மதிய உணவுத் திட்டம் தொடர்பாக சந்தேகத்துக்குரிய பணப் பரிமாற்றம் குறித்த ஆவணங்கள், சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்காக அளித்த முன்மொழிவுகள் குறித்த ஆவணங்கள் இடம்பெற்றுள்ளன.
அவற்றோடு ஒரு கணக்குப் புத்தகம் ஒன்றும் சிக்கியுள்ளது. அதில், பல ஆண்டுகளாக அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் பலருக்கு கொடுத்த பணம் குறித்த விவரங்கள் காணப்படுகின்றன. ஆனால் அவை சங்கேத குறியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த முறைகேட்டினால் லாபமடைந்தவர்களாக இடம்பெற்றுள்ள பெயர்களில், சில முக்கிய பதவிகளில் இருந்த அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களும் உள்ளன. சில கோடிப் பணப் பரிமாற்றம், ஆன்லைன் மூலம் வங்கிகளால் நடந்துள்ளது.
இதுவரை சுமார் ரூ.2,400 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக வருமான வரித்துறையின் புலன்விசாரணை அதிகாரிகள் மூலம் தெரிய வந்துள்ளது. இதில் யார்-யாரெல்லாம் ஈடுபட்டிருக்கக்கூடும் என்பதை கண்டறிந்து அதுபற்றிய பெயர்ப்பட்டியலை வருமான வரித்துறை தயாரித்துள்ளது.
அந்த பட்டியலில் உள்ளவர்களுக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரிக்கும் பணியை வருமான வரித்துறை தொடங்கியுள்ளது. அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் அந்த நிறுவனம் ஏன் பணம் கொடுக்க வேண்டும் என்பதற்கான காரணத்தை அறிவதற்கான விசாரணையையும் வருமான வரித்துறை நடத்தி வருகிறது.
ஆரம்பகட்ட விசாரணையில் சில உண்மைகளை வருமான வரித்துறை கண்டறிந்துள்ளது. அதில், அந்த நிறுவனத்துக்கு பணி ஆணைகளை வழங்குவதற்காகவும், பில்களுக்கான பணத்தை அனுமதிக்கும் ஆணைகளை பிறப்பிப்பதற்காகவும் அதிகாரிகளுக்கு பணம் கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த ஊழல் குறித்து தமிழக அரசுக்கும், மத்திய அரசின் விசாரணை முகமைகளுக்கும் எழுத்து மூலம் தகவல் தெரிவிக்கவும் வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.
வரி ஏய்ப்பு செய்வதற்காக தனது வருவாயையும் அந்த நிறுவனம் மறைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், நாமக்கல்லில் உள்ள ஒரு தேசிய வங்கியில் கடன் பெறுவதற்காக முரண்பட்ட ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாகவும் வருமான வரித்துறை குற்றம்சாட்டுகிறது.
இந்த முறைகேட்டில் தொடர்புடையவராக சந்தேக வலையில் சிக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டு, அங்கு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவற்றில் சில ஆவணங்கள், தமிழக அரசின் வகைப்படுத்தப்பட்ட கோப்புகளாகும். மூத்த அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் அவை வெளிவந்திருக்க முடியாது என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் கருதுகின்றனர். இந்த நிறுவனத்தை கர்நாடக அரசு கருப்புப் பட்டியலில் வைத்திருப்பதோடு அங்கு அந்த நிறுவனத்தின் மீது லோக் ஆயுக்தா தொடர்ந்த வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
கிறிஸ்டி நிறுவன நிர்வாகத்துடன் பல வேறு நிறுவனங்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
அந்த நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. வருமான வரித்துறையின் நடவடிக்கைகளுக்கு தடைகேட்டு அந்த நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.