சுங்கச்சாவடியை அகற்ற கோரி போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்டார்.
சுங்கச்சாவடியை அகற்ற கோரி போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது
Published on

மதுரை,

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கப்பலூரில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் கேட்பது தொடர்பாக தொடர்ந்து பிரச்சினை இருந்து வந்தது.

இந்த நிலையில் தற்போது உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கடந்த 2 ஆண்டுக்குரிய சுங்க கட்டணத்தை செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கண்டனம் தெரிவித்து இருந்தார். மேலும் திருமங்கலம், கப்பலூர் வாகன ஓட்டிகளுக்கு உள்ளூர் கட்டணம் வசூலிக்க கூடாது என தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆதரவாக சுங்கச்சாவடியை அகற்றக்கோரி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திடீரென உண்ணாவிரத போராட்டம் அறிவித்தார்.

இதை தொடர்ந்து இன்று காலை கப்பலூர் சுங்கச்சாவடி அருகே சுங்கச்சாவடியை அகற்றக்கோரி முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அங்கு பந்தல் அமைக்கும் பணி நடைபெறுவதை அறிந்த திருமங்கலம் டி.எஸ்.பி. சிவகுமார் தலைமையிலான போலீசார் உண்ணாவிரத போராட்டத்திற்கு முறையாக அனுமதி பெறவில்லை. எனவே பந்தல் அமைக்க கூடாது என்று தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பந்தல் அமைக்க அனுமதி அளிக்காததால் தொண்டர்களுடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன், மாவட்டத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் தமிழ்செல்வம், ஒன்றிய செயலாளர் அன்பழகன், பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன், மீனவர் அணி மாவட்ட செயலாளர் சரவண பாண்டி மற்றும் மாநில நிர்வாகிகள் ஜான் மகேந்திரன், வெற்றிவேல், உச்சப்பட்டி செல்வம், சாமிநாதன் மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரிடம் போலீசார் உரிய அனுமதி பெறாமல் போராட்டம் நடத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம். போராட்டத்தை கைவிட வேண்டும் என கூறி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டத்தை கைவிடாததால் அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து பஸ்களில் ஏற்றினர். இதற்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை கைது செய்ய முற்பட்ட போது, தொண்டர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தள்ளுமுள்ளு நடைபெற்றது. இதனால் சுங்கச்சாவடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. தொண்டர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி பஸ்சில் ஏற்றினர். இதைத்தொடர்ந்து போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் ஆகியோரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com