வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார்.
வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி
Published on

இலவச பயிற்சி

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் எஸ்.எஸ்.சி (எம்.டி.எஸ்) போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடந்தது. இதை கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு பாட குறிப்புகள் அடங்கிய இலவச கையேட்டை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்றோர், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு பயில்பவர்களுக்கு ஏதுவாக இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட ஒரு தேர்வுக்கு மட்டும் படிக்காமல், அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் விண்ணப்பித்து தேர்வு எழுதினால் மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், மாணவர்கள் தினமும் செய்தித்தாள்களை தொடர்ந்து வாசிக்க வேண்டும்

செய்தித்தாள் படிக்க வேண்டும்

மாணவர்கள் அனைத்து பாடக்குறிப்புகளுக்கும் தனித்தனியாக குறிப்புகள் எடுத்துக்கொண்டு படிக்க வேண்டும். மாணவர்கள் ஒரு குழுவாக இணைந்து போட்டித் தேர்வுக்கான வினாக்களை விவாதம் செய்ய வேண்டும். தேர்வு மையங்களில் சொல்லித்தரும் பாடங்களைத் தவிர நாம் தனியாக அதிகமான புத்தகங்கள், செய்தித்தாள்களை படிக்க வேண்டும். இங்கு அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால், அதிகளவில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும்.

இந்த அலுவலகத்தின் வாயிலாக இதுவரை 100-க்கும் அதிகமானோர் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள நூலகத்தில் போட்டித்தேர்வுக்கான அனைத்து புத்தகங்கள், நடப்பு நிகழ்வுகளுக்கான குறிப்பேடுகள் உள்ளதால், மாணவ, மாணவிகள் இதனை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com