நாளை மறுநாள் முதல் 18-ந்தேதி வரை பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை

பழனி முருகன் கோவிலில், நாளை மறுநாள் முதல் வருகிற 18-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.
நாளை மறுநாள் முதல் 18-ந்தேதி வரை பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை
Published on

திண்டுக்கல்,

பழனி முருகன் கோவிலில், நாளை மறுநாள் முதல் வருகிற 18-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பழனி முருகன் கோவிலில் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 21-ந்தேதி வரை தைப்பூச திருவிழா நடைபெறுகிறது. கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திருவிழா நடத்தப்பட உள்ளது.

அதன்படி பழனி முருகன் கோவில் மற்றும் உபகோவில்களில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 18-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று தைப்பூச திருவிழா கொடியேற்றம், பக்தர்கள் கலந்து கொள்ளாமல் கோவில் மூலம் நடத்தப்படும்.

இதேபோல் தைப்பூச திருவிழாவின் 10 நாட்களும் மண்டகப்படிதாரர்களுக்கு அனுமதி இல்லை. அனைத்து மண்டகப்படிகளும் ஆகமவிதிகளுக்கு உட்பட்டு கோவில் மூலம் நடத்தப்படும்.

வருகிற 17-ந்தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அதோடு வெள்ளி ரதம் புறப்பாட்டுக்கு பதிலாக கோவில் வளாகத்தில் வெள்ளிமயில் வாகனத்தில் சாமி புறப்பாடு கோவில் பணியாளர்களால் நடத்தப்படும்.

இதுமட்டுமின்றி வருகி ற18-ந்தேதி தைப்பூச திருநாளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மாலை 4.45 மணிக்கு சிறிய மரத்தேரில் கோவில் வளாகத்தில் கோவில் பணியாளர்களை கொண்டு தேரோட்டம் நடத்தப்பட உள்ளது.

இதையடுத்து 21-ந்தேதி கோவில் வளாகத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். அதிலும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. மேலும் தைப்பூச திருவிழா நிகழ்ச்சிகள் கோவில் வலைத்தளம், யூ-டியூப் சேனல் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

இவ்வாறு கலெக்டர் விசாகன் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com