ஊரப்பாக்கம் ஊராட்சியில் சாலையோரம் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பை; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ஊரப்பாக்கம் ஊராட்சியில் சாலையோரம் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊரப்பாக்கம் ஊராட்சியில் சாலையோரம் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பை; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
Published on

குப்பை கழிவுகள் தேக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சென்னை புறநகரையொட்டி மிக அருகிலே அமைந்துள்ள ஊரப்பாக்கம் ஊராட்சியில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், அதிக அளவு பெருகிவிட்டது. ஆனால் மக்களுக்கு தேவையான சாலை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் போதிய அளவில் செய்யப்படாமலே இருக்கின்றன. மேலும் மழைக்காலங்களில் ஊரப்பாக்கம், அய்யஞ்சேரி, கிளாம்பாக்கம் போன்ற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் குண்டும் குழியுமாக, சேறும் சகதியுமாக காணப்படும் சாலைகளில் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

மேலும் ஊராட்சியில் எங்கு பார்த்தாலும் சாலையோரங்களில் குப்பை கழிவுகள் தேங்கி கிடக்கிறது.

இந்த குப்பை கழிவுகளில் உள்ள காய்கறி கழிவுகளை மாடுகள், பன்றிகள் வந்து சாப்பிடுகின்றன. குப்பைகள் பல நாட்களாக வாரப்படாமல் அப்படியே கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஊரப்பாக்கத்தில் இருந்து காரணைப்புதுச்சேரி செல்லும் சாலையோரம் அமைந்துள்ள ஊரப்பாக்கம் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தைச் சுற்றி மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

ஊரப்பாக்கம் ஊராட்சியில் குப்பைகளை தினந்தோறும் சரியான முறையில் சேகரித்து அதனை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிக்க வேண்டும், ஊராட்சி நிர்வாகம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளை சரி செய்து மக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருவதில் கவனம் செலுத்த வேண்டும். ஊரப்பாக்கம் ஊராட்சி பொதுமக்களின் குறைகளைப் பற்றி பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட கலெக்டரிடம் பலமுறை புகார்கள் அளித்தும் இதுவரை மலை போல் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றவில்லை. மேலும் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. எனவே உயர் அதிகாரிகள் நேரில் கள ஆய்வு செய்து உடனடியாக குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com