அரசு பஸ் டிரைவர் கண்ணன் தேனிக்கு பணியிட மாற்றம்

போக்குவரத்து துறை அமைச்சர் காலில் குழந்தையுடன் விழுந்து கோரிக்கை வைத்த 7 மணி நேரத்தில் டிரைவர் கண்ணனுக்கு பணியிட மாறுதல் வழங்கி உத்தரவிடப்பட்டது.
அரசு பஸ் டிரைவர் கண்ணன் தேனிக்கு பணியிட மாற்றம்
Published on

கோவை

போக்குவரத்து துறை அமைச்சர் காலில் குழந்தையுடன் விழுந்து கோரிக்கை வைத்த 7 மணி நேரத்தில் டிரைவர் கண்ணனுக்கு பணியிட மாறுதல் வழங்கி உத்தரவிடப்பட்டது.

பணி நியமன ஆணை

அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நேற்று முன்தினம் கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை, அதிக மதிப்பெண் எடுத்த போக்குவரத்து கழக ஊழியர்களின் குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி கோவை சுங்கத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அப்போது சுங்கம் பணிமனையில் அரசு பஸ் டிரைவராக பணிபுரியும் கண்ணன் என்பவர் தனது கைக்குழந்தையுடன் வந்து அமைச்சரிடம் மனு கொடுத்தார்.

அவர் திடீரென்று தனது குழந்தையுடன் அமைச்சரின் கால்களில் விழுந்து தனக்கு பணியிட மாற்றம் தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்.

மனைவி மரணம்

இது குறித்து டிரைவர் கண்ணன் கூறியதாவது:-

கடந்த 9 ஆண்டுகளாக கோவையில் தங்கி அரசு பஸ் டிரைவராக பணிபுரிகிறேன். எனது சொந்த ஊர் தேனி. எனக்கு 5 வயது மற்றும் 6 மாதத்தில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது மனைவி டெங்கு காய்ச்சலால் மரணம் அடைந்து விட்டார்.

இதனால் எனது 2 பெண் குழந்தைகளையும் கவனிக்க முடிய வில்லை.

எனது பெற்றோர் தேனியில் வசிக்கின்றனர். வயதான காலத்தில் அவர்களால் கோவை வந்து பெண் குழந்தைகளை கவனிக்க முடியாத நிலை உள்ளது. எனவே எனக்கு சொந்த ஊரான தேனிக்கு பணியிட மாறுதல் அளிக்க வேண்டும் என்றார்.

பணியிட மாற்றம்

இந்த நிலையில் டிரைவர் கண்ணனின் பணியிட மாறுதல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தினார்.

இது தொடர்பாக முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் அரசு பஸ் டிரைவர் கண்ணனுக்கு நிரந்தரமாக தேனிக்கு பணியிட மாற்றம் செய்து போக்குவரத்து கழக உதவி பொதுமேலாளர் உத்தரவிட்டார்.

மதியம் 12.30 மணிக்கு கோரிக்கை மனு அளித்த நிலையில் மாலை 7.30 மணிக்கு அதாவது 7 மணி நேரத்தில் பணியிடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டதால் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சருக்கு டிரைவர் கண்ணன் நன்றி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com