கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு அமர்வுப்படியை உயர்த்தி வழங்க அரசாணை வெளியீடு..!

தமிழகத்தில் ஊராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு அமர்வுப்படியை உயர்த்தி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அமர்வுப்படியை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

"மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பிரதிநிதிகளுக்கு கூட்டங்களில் கலந்து கொள்ளும் நாட்களில் அமர்வுப்படித் தொகை பத்து மடங்காகவும், கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வுப்படித் தொகை ஐந்து மடங்காகவும் உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதல் அமைச்சர் அவர்களால் சட்டப்பேரவையில் விதி எண்.110-ன் கீழ் கடந்த 22.04.2022 நாளன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனையடுத்து, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன் படி தற்போது நடைமுறையில் உள்ள மூன்று அடுக்கு ஊராட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளான மாவட்ட ஊராட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் & உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு அமர்வுப்படி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு மட்டும் அமர்வுப்படி உயர்த்தி வழங்கப்பட்டது எனவும், மற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உயர்த்தப்படவில்லை எனவும், பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த அமர்வுப்படியினை உயர்த்தி வழங்கக்கோரி வரப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையில் தற்போது வழங்கப்படும் அமர்வுப்படியில் இருந்து மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பிரதிநிதிகளுக்கு கூட்டங்களில் கலந்து கொள்ளும் நாட்களில் மாதம் ஒன்றிற்கு ஒரு முறை மட்டும் அமர்வுப்படித் தொகையினை பத்து மடங்காக உயர்த்தி வழங்கிடவும், கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ஒரு முறை மட்டும் அமர்வுப்படித் தொகை ஐந்து மடங்காக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அமர்வுத் தொகை உயர்த்தி வழங்குவதன் காரணமாக தமிழகத்திலுள்ள 12,525 கிராம ஊராட்சித் தலைவர்கள், 99,327 கிராம ஊராட்சி உறுப்பினர்கள், 388 ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், 6,471 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், 36 மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் மற்றும் 655 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 119 இலட்சம் ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பயன்பெறுவர்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com