கொடைக்கானல், ராமேசுவரத்தில் விரைவில் ஹெலிகாப்டர் தளம்: அமைச்சர் மதிவேந்தன்

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் கொடைக்கானல், ராமேசுவரத்தில் விரைவில் ஹெலிகாப்டர் தளம் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டார்.
கொடைக்கானல், ராமேசுவரத்தில் விரைவில் ஹெலிகாப்டர் தளம்: அமைச்சர் மதிவேந்தன்
Published on

இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஹெலிகாப்டர் தளம்

சுற்றுலாத்துறை மானியக்கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் சென்னையில் உள்ள சுற்றுலாத்துறை தலைமை அலுவலகத்தில் அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றம் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் கொடைக்கானல், ராமேசுவரம் ஆகிய இடங்களில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்குவதற்காக ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தல ஆய்வு

ராமேசுவரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தை, ஆலோசனைக்குழு தல ஆய்வு மேற்கொண்டுள்ளது. கொடைக்கானல் நிலத்துக்கான தல ஆய்வு விரைவில் நடைபெற உள்ளது.

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் இரவிலும் கண்டுகளிக்கும் வகையில் லேசர் தொழில்நுட்ப உதவியுடன் ஒளியூட்டம் செய்வதற்கு கருத்துருக்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

பிச்சாவரத்தில் அமைந்துள்ள அலையாத்தி காடுகளை பார்ப்பதற்கு உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். இங்கு சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்து தரும் வகையில் பூங்கா, திறந்தவெளி முகாம், காட்சி கோபுரம், படகு குழாம், தங்கும் அறைகள், உணவகம் போன்றவற்றை அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

முதலியார்குப்பம் படகு குழாம்

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நீர்வீழ்ச்சியின் அழகை கண்டு ரசிக்க பார்வையாளர் மாடம் மற்றும் பிற வசதிகள் ஏற்படுத்தும் வகையில் சுற்றுலா பெரும் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. முதலியார்குப்பம் படகு குழாம் அருகில் ஓடியூர் ஏரியில் அமைந்துள்ள தீவுப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் படகில் செல்வதில் அதிக ஆர்வம் காட்டி வருவதால் இங்கு ரூ.50 லட்சம் மதிப்பில் நீர் விளையாட்டுகள், கடற்கரை விளையாட்டுகள், தேநீர் விடுதி போன்ற வசதிகளை செய்வதற்கு அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளால் அதிகம் அறியப்படாத இடங்களை சிறந்த முறையில் புகைப்படம் எடுத்து முகநூலில் வெளியிடும் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரபல ஓட்டல்களில் தங்குவதற்கான பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டது.

மேலும், அவர்களுக்கு அமைச்சர் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com