

சென்னை,
கடந்த 10 ஆண்டுகளாக ஹலோ எப்.எம்.மில் பட்டியல் விருது நிகழ்ச்சியில் ஒவ்வொரு வருட இறுதியிலும் அனைவராலும் அதிகம் பேசப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்த திரைப்படங்களுக்கு, திரைக்கலைஞர்களுக்கு ஹலோ திரை விருது மற்றும் இசை விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில் 2018-ம் ஆண்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை நினைவு கூறுவதுடன், சிறந்த திரைப்பட கலைஞர்களை வரிசைப்படுத்தும் பட்டியல் 2018 நிகழ்ச்சி ஹலோ எப்.எம்.மில் கடந்த வியாழன் முதல் நேற்றுமுன்தினம்(சனிக்கிழமை) வரை 3 நாட்களுக்கு ஒலிபரப்பானது.
மதியம் 2 மணி முதல் 4 மணி வரை 2018-ம் ஆண்டின் சிறந்த பாடல், பாடலாசிரியர், பாடகர் மற்றும் பாடகி பற்றிய பட்டியல் 2018 இசை விருதுகள் நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது.
மாலை 6 மணிக்கு 2018-ன் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த படத்தொகுப்பாளர் பற்றிய பட்டியல் 2018 திரை விருதுகள் நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதி நாளான நேற்றுமுன்தினம் இந்த ஆண்டின் சிறந்த பாடல், பாடலாசிரியர், சிறந்த இசையமைப்பாளர், பாடகர், பாடகிக்கான இசை விருதுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறந்த பாடலாக டிக் டிக் டிக் திரைப்படத்தில் இடம்பெற்ற குறும்பா... பாடல் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருதை இசையமைப்பாளர் இமான் பெற்றுக் கொண்டார்.
சிறந்த பாடலாசிரியருக்கான விருது வடசென்னை படத்தில் வரும் என்னடி மாயாவி... பாடலுக்காக பாடலாசிரியர் விவேக்கிற்கு வழங்கப்பட்டது. என்னடி மாயாவி... பாடலை பாடிய சித் ஸ்ரீராமிற்கு இந்த வருடத்திற்கான சிறந்த பாடகருக்கான விருது அளிக்கப்பட்டது. 96 படத்தில் இடம்பெற்ற காதலே காதலே... பாடலை பாடிய சின்மயிக்கு சிறந்த பாடகிக்கான விருது கொடுக்கப்பட்டது.
பட்டியல் 2018 திரை விருதுகள் நிகழ்ச்சியில் சிறந்த நடிகராக வடசென்னை திரைப்படத்திற்காக நடிகர் தனுஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார் மகா நடிகை படத்திற்காக நடிகை கீர்த்திசுரேஷ் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுக் கொண்டார்.
சிறந்த படமாக பரியேறும் பெருமாள் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருதை படத்தயாரிப்பாளர் ரஞ்சித் சார்பாக அந்த படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் பெற்றுக் கொண்டார்.
மேற்கு தொடர்ச்சி மலை படத்தை இயக்கிய லெனின் பாரதிக்கு சிறந்த இயக்குனர் விருது அளிக்கப்பட்டது.
வடசென்னை படத்திற்கு சிறந்த இசைக்கோர்வை அமைத்த சந்தோஷ் நாராயணனுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது அளிக்கப்பட்டது.
சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் பணியாற்றிய தேனி ஈஸ்வர் பெற்றுக் கொண்டார். இந்த படத்தை விறுவிறுப்பாக தொகுத்த காசி விஸ்வநாதனுக்கு சிறந்த எடிட்டருக்கான விருது கொடுக்கப்பட்டது.
நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குனர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர்கள் இமான், சந்தோஷ் நாராயணன், இயக்குனர் லெனின் பாரதி, பாடலாசிரியர் விவேக் உள்பட ஏராளமானோர் ஹலோ எப்.எம். அரங்கத்திற்கு வந்து விருதை நேரடியாக பெற்றுக்கொண்டு பெருமை சேர்த்தனர்.
2018-ம் வருடத்தில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்களை பற்றிய ஹலோ தமிழா விருது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை இரவு 9 மணி முதல் 11 மணி வரை 2018-ம் ஆண்டின் முக்கிய சம்பவங்களை திரும்பி பார்க்கும் வகையிலான நினைவில் நின்ற நிகழ்வுகள் என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது.