அனுமதியின்றி செயல்பட்ட கிளீனிக் பூட்டி 'சீல்' வைப்பு

அனுமதியின்றி செயல்பட்ட கிளீனிக் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது.
அனுமதியின்றி செயல்பட்ட கிளீனிக் பூட்டி 'சீல்' வைப்பு
Published on

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த 22 வயது பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். விசாரித்தபோது கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டு, ரத்தப்போக்கு அதிகம் இருந்தது தெரியவந்தது. அவரிடம் விசாரிக்கையில் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் கருக்கலைப்பு மாத்திரைகள் கிடைப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த செவிலியர் கார்த்திகா என்பவரிடம் மருத்துவ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

இதில் கருக்கலைப்பு மாத்திரைகளை அருள்புரம் பகுதியில் உள்ள ஒரு மருந்துக்கடையில் வாங்கியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் கனகராணி தலைமையில் துணை இயக்குனர் (குடும்ப நலம்) கவுரி, வட்டார மருத்துவ அதிகாரி சுடர்விழி, அருள்புரம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பர்வீன், மருந்து கட்டுப்பாடு அலுவலர் ராமசாமி, இணை இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளர் ஹரிகோபாலகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பந்தப்பட்ட மருந்துக்கடையில் நேற்று ஆய்வு செய்தனர்.

அந்த கடையின் அருகே கிளினீக் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. அந்த கிளீனிக் நடத்துவதற்கு உரிமம் பெறப்படவில்லை. உயிரிக்கழிவுகளை வெளியேற்றுவதற்கான வழிமுறைகளும் சரியாக பின்பற்றப்படவில்லை. தீ தடுப்பு முறைகளுக்கான சான்று பெறப்படவில்லை. கிளீனிக் நடத்துவதற்கு தமிழ்நாடு மருத்துவ நிர்வாகவியல் சட்டத்தின்படி சான்று பெற வேண்டும். அந்த மாதிரியான எந்த உரிமமும் இல்லை. இதைத்தொடர்ந்து அந்த கிளீனிக்கை அதிகாரிகள் பூட்டி 'சீல்' வைத்தனர்.

மேலும் சம்பந்தப்பட்ட மருந்துக்கடையில் மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு, அந்த கடையில் கருக்கலைப்பு மாத்திரைகள் மற்றும் தடை செய்யப்பட்ட மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று தொடர்ந்து ஆய்வு நடத்தப்படுகிறது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com