எஸ்.புதூர் யூனியன் அலுவலகம் முன்பு-ஜாக்டோ-ஜியோ மனித சங்கிலி போராட்டம்

எஸ்.புதூர் யூனியன் அலுவலகம் முன்பாக ஜாக்டோ-ஜியோ சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது
எஸ்.புதூர் யூனியன் அலுவலகம் முன்பு-ஜாக்டோ-ஜியோ மனித சங்கிலி போராட்டம்
Published on

எஸ்.புதூர்

எஸ்.புதூர் யூனியன் அலுவலகம் முன்பாக ஜாக்டோ-ஜியோ சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகள்

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக ஜாக்டோ - ஜியோ சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதற்கு எஸ்.புதூர் வட்டார உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சண்முகம், ஜெயபிரகாஷ், குமரேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், 18 மாதகால அகவிலைப்படி நிலுவைத்தொகையை வழங்க வேண்டும், காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள ஒப்பு விடுப்பினை உடனடியாக வழங்குதல், இடைநிலை ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல், அரசுப்பணியில் உள்ள ஊதிய முரண்பாடுகளை அகற்றுதல், காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர், செவிலியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

30 சதவீதத்திற்கு மேலாக உள்ள அரசு காலிப்பணியிடங்களை நிரப்புதல், தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பணிவரன் முறைப்படுத்தி ஊதியம் வழங்குதல், சாலைப்பணியாளர்கள் 41 மாத கால பணிநீக்கக் காலத்தினை முறைப்படுத்த வேண்டும்.

அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட உள்ள எல்.கே.ஜி, யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு மத்திய அரசின் முடிவின்படி புதிய மாண்டிச்சேரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும், இதற்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணி மாற்றம் செய்வதை கை விட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை பதாகைகளை கழுத்தில் அணிந்து கொண்டு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

ஏமாற்றம் அளிக்கிறது

இதுகுறித்து ஜாக்டோ-ஜியோ வட்டார உயர்மட்ட குழு உறுப்பினர் சண்முகம் கூறுகையில், தமிழக பட்ஜெட்டில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு இருக்கும் என அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்த்தோம். ஆனால் அறிவிப்பு இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. எனவே, சட்டசபை முடிவதற்குள் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம், ஏற்கனவே ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து மாநில அளவில் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும், என்றார்.

இதில் ஜாக்டோ-ஜியோ அமைப்பு உறுப்பினர்கள், நிர்வாகிகள், சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள், சாலைப்பணியாளர்கள் உள்பட பல துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com