"ஸ்பெயினில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த உள்ளேன்" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

வெளிநாட்டு பயணங்கள் மூலம் ஐரோப்பிய நாடுகளில் முதலீடுகளை ஈர்க்க முடியும் என நம்புவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
"ஸ்பெயினில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த உள்ளேன்" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
Published on

சென்னை,

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 8 நாட்கள் சுற்றுப்பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஸ்பெயின் நாட்டுக்கு செல்கிறார். இதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த முதல்-அமைச்சர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

"நமது திராவிட மாடல் அரசு ஒரு டிரில்லியன் பொருளாதார இலக்கை எட்டிடும் வகையில் 2024-ம் ஆண்டு தொடக்கமே உலக முதலீட்டாளர் மாநாடு வெற்றியாக அமைந்தது. அதனை தொடர்ந்து, 8 நாட்கள் பயணமாக ஸ்பெயின் செல்கிறேன். அடுத்த மாதம் 7-ந்தேதி காலை சென்னை திரும்புகிறேன்.

கடந்த 2022-ம் ஆண்டு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றிருந்தேன். அந்த பயணத்தில் 12 ஆயிரத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய 6,100 கோடி ரூபாய் முதலீடுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதேபோல கடந்த வருடம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் பயணத்தின் போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய 1,342 கோடி ரூபாய்க்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

ஸ்பெயின் நாட்டிலும் முதலீட்டாளர் மாநாடு நடத்த இருக்கிறேன். வெளிநாட்டு பயணங்கள் மூலம் ஐரோப்பிய நாடுகளில் முதலீடுகளை ஈர்க்க முடியும் என நம்புகிறேன். எனவே உங்கள் அனைவரின் வாழ்த்துக்களோடு இந்த பயணம் வெற்றிபெற வேண்டும் என விரும்புகிறேன்." இவ்வாறு அவர் பேசினார்.

முதல் அமைச்சரை வழியனுப்புவதற்காக பல அமைச்சர்கள் சென்னை விமான நிலையம் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com